ஒரத்தநாடு அருகே லாரி டிரைவர் அடித்துக்கொலை கணவன்-மனைவிக்கு வலைவீச்சு

ஒரத்தநாடு அருகே லாரி டிரைவரை அடித்துக்கொலை செய்த கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-05-09 22:15 GMT
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் பாரிவள்ளல் (வயது40). லாரி டிரைவர். இவருடைய மனைவி ராணி இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். பாரிவள்ளல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வடக்குக்கோட்டையில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று பாரிவள்ளல் அவரது மனைவி ராணியிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ராணி அதே ஊரை சேர்ந்த அவரது அக்கா கலைச்செல்வியிடமும், அவரது கணவர் ராஜப்பாவிடமும் கூறினார்.

அடித்துக்கொலை

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற ராஜப்பாவும், அவரது மனைவி கலைச்செல்வியும் பாரிவள்ளலை கண்டித்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராஜப்பாவும், அவரது மனைவி கலைச்செல்வியும் சேர்ந்து பாரிவள்ளலை உருட்டுக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பாரிவள்ளலை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பாரிவள்ளல் பரிதாபமாக இறந்தார்

இது குறித்து பாரிவள்ளலின் அண்ணன் குமணன் அளித்த புகாரின்பேரில் பாப்பாநாடு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ராஜப்பா மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்