நெல்லை அருகே போலீஸ் ஏட்டு கொலை: மணல் தரகர் உள்பட மேலும் 2 பேர் கைது

நெல்லை அருகே போலீஸ் ஏட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக மணல் தரகர் உள்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை கேரளா விரைந்தது.

Update: 2018-05-09 21:30 GMT
இட்டமொழி, 

நெல்லை அருகே போலீஸ் ஏட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக மணல் தரகர் உள்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை கேரளா விரைந்தது.

போலீஸ் ஏட்டு கொலை

நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் ஜெகதீஷ் துரை (வயது 34). இவர் அந்த பகுதியில் ரோந்து சென்றபோது டிராக்டரில் மணல் கடத்தி சென்ற கும்பலை பிடிக்க முயன்றார். அப்போது மணல் கடத்தல் கும்பலால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தாமரைகுளத்தை சேர்ந்த முருகன் (30) என்பவர் உள்பட 8 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மேலும் 2 பேர் கைது

இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, போலீஸ் ஏட்டு கொலையில் தொடர்புடைய கிருஷ்ணன் (50), முருகபெருமாள் (21), மணிக்குமார் (27) ஆகிய 3 பேரை ஏற்கனவே கைது செய்து உள்ளனர். மற்ற 5 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சேர்மத்துரை (28), ராஜாரவி (28) ஆகிய மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் சேர்மத்துரை மணல் தரகர் ஆவார்.

தனிப்படை கேரளா விரைந்தது

இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முருகன் மற்றும் அமிதாபச்சன் (27), தங்கவேலு (30) ஆகிய 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முருகன் கேரளாவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனால் அவரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்