கலவரம் நடந்த பொம்மிநாயக்கன்பட்டியில் கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
தேவதானப்பட்டி அருகே கலவரம் நடந்த பொம்மிநாயக்கன்பட்டியில் இயல்பு நிலை திரும்ப கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இஸ்லாமிய நலக்கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தேனி
தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு, கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக இருதரப்பினர் மீதும் தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் எல்லாளன், தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட செயலாளர் நாகரத்தினம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அகமது முஸ்தபா மற்றும் நிர்வாகிகள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இஸ்லாமிய நலக் கூட்டமைப்பு சார்பில் அவர் கள், பொம்மிநாயக்கன்பட்டி பிரச்சினை தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், ‘பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் போலீஸ் துறைக்கு பயந்து இருதரப்பிலும் ஆண்கள் வெளியூர்களுக்கு சென்று விட்டனர். இரு பகுதியிலும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மட்டும் இருக்கிறார்கள். இக்கிராமத்தில் இயல்பு நிலைக்கு திரும்ப இருதரப்பு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறியிருந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்றனர். கலெக்டரிடம் மொத்தமாக சென்று மனு அளிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும், 3 பேர் மட்டும் மனு அளிக்க அலுவலகத்துக்குள் செல்லுமாறும் அங்கிருந்த அலுவலர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இதனால், மனு அளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல், இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் ஒரு மனு அளித்தனர்.
அப்போது இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் மற்றும் நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அந்த மனுவில், ‘பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் இறந்த பெண்ணின் இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்தி, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அமைதியாக வாழ வழிவகை செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
முன்னதாக, கலவரத்தில் காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற கலைச்செல்வனை, இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, இருபிரிவினருக்கிடையே நடந்த மோதலில் காயமடைந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த கடைகள், வீடுகளை சீரமைத்து கொடுக்க வேண்டும். கலவரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களை நேரில் சந்தித்து திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் உரிய நேரத்தில் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார். அவரது கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை இந்து மக்கள் கட்சி ஆதரிக் கும் என்றார்.