கும்மிடிப்பூண்டியில் குடியிருப்பு பகுதிக்கு பொதுவழி கேட்டு பொதுமக்கள் மறியல், போக்குவரத்து பாதிப்பு

கும்மிடிப்பூண்டியில் குடியிருப்பு பகுதிக்கு பொதுவழி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-05-09 00:45 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டை சேர்ந்தது வெட்டுகாலணி. இங்கு உள்ள புதிய குடியிருப்பு பகுதியில் 1976-ம் ஆண்டு ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையில் 80 குடும்பங்களை சேர்ந்த சுமார் 600 பேர் வசித்து வருகின்றனர்.

அரசால் வழங்கப்பட்ட இந்த குடியிருப்பு பகுதியில் பொது வழி, தெருக்களுக்கான குறுக்கு வழி மற்றும் சுடுகாட்டு பாதைக்கான வழி போன்றவற்றை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் இந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக உரிய வழி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அந்த பகுதி மக்கள் பல முறை கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்து உள்ளனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை.

இந்த நிலையில் தங்களது குடியிருப்பு பகுதிக்கு அனைத்து விதத்திலும், பொதுவழியை ஏற்படுத்தி தரக்கோரி அந்த பகுதி பொதுமக்கள், கும்மிடிப்பூண்டி பஜார் சாலையான ஜி.என்.டி. சாலையில் நேற்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தாசில்தாரை வரவழைத்து இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்தார். இதனை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போராட்டம் காரணமாக கும்மிடிப்பூண்டி பஜார் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று மாலை கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார் தலைமையில் தாசில்தார் ராஜகோபால், அதிகாரிகளுடன் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

மேலும், எம்.எல்.ஏ.விஜயகுமார் அந்த பகுதி மக்களிடம் பேசும்போது கூறியதாவது:-

இந்த பிரச்சினை தொடர்பாக தாசில்தார் அலுவலகம் வாயிலாக நிலங்களை அளந்து முறையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். எனவே மற்றவர்களுக்கு இடையூறாக இது போன்ற மறியல் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்