மணல் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற வழக்கு; வாலிபர் கைது

ராமநாதபுரம் அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்ற வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2018-05-08 23:22 GMT
ராமநாதபுரம்,

மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தனிப்படை அமைத்து அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் இரவு பகலாக ரோந்து சுற்றி மணல் கடத்தலை தடுத்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி சிறப்பு குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கணேசலிங்கபாண்டியன் தலைமையிலான போலீசார் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மரப்பாலம் பகுதியில் மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி விசாரித்தனர். அதில் லாரி டிரைவர் போலீசாரிடம் உரிய விளக்கம் அளிக்காமல் தகராறு செய்தவாறு, சப்-இன்ஸ்பெக்டர் மீது மோதி கொலை செய்வது போல லாரியை வேகமாக எடுத்து சென்றார். போலீசார் விரட்டி சென்ற போது, ஒரு கார் போலீசாரை முந்தி சென்று லாரியை நெருங்க விடாமல் குறுக்கும் நெடுக்குமாக சென்றது.

தொடர்ந்து லாரியையும், காரையும் ஒருகட்டத்தில் போலீசார் மடக்கி நிறுத்தினர். அப்போது அதில் இருந்த டிரைவர்கள் உள்பட 3 பேர் வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் கணேசலிங்கபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகர் கார்மேகம் மகன் கார்த்திக் மற்றும் டிரைவர்கள் முனியசாமி மகன் கார்த்திக், முத்துமுருகன் ஆகியோரை தேடிவந்தனர்.

அதில் நேற்றுமுன்தினம் இரவு கார்மேகம் மகன் கார்த்திக் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்