காரைக்குடியில் கடத்தல் மணல் விற்பனை தாராளம்: ஒரு மாதத்தில் 70 லாரிகள் பிடிபட்டுள்ளன

சிவகங்கை மாவட்டத்தில் கடத்தல் மணல் விற்பனை தாராளமாக நடந்துவருகிறது.

Update: 2018-05-09 00:00 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் தொழில் நகரமாகவும், சுற்றுலா நகரமாகவும் காரைக்குடி விளங்கி வருகிறது. இங்கு குடியிருப்புகளும் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மணல் தட்டுப்பாட்டால் காரைக்குடி பகுதியில் பெரும்பாலான கட்டுமான பணிகள் தற்போது முடங்கிப்போய் உள்ளன. இதுபோன்ற சூழல்களை பயன்படுத்தி குறுகிய காலத்தில் பெருமளவு சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் மணல் கடத்தல் வியாபாரத்தில் இறங்கிவிட்டனர்.

காரைக்குடி பகுதியின் மணல் தேவைக்கு திருச்சி அருகில் உள்ள அரசு மணல் குவாரிக்கு தான் செல்ல வேண்டும். அங்கு ஆன்லைனில் பதிவு செய்தால் ஒருவாரம் கழித்தே தேதி குறிப்பிட்டு மணல் அள்ள வரச் சொல்வார்கள். பின்னர் அங்கு சென்றும் 2 நாட்கள் காத்திருந்து ஒரு லாரி மணலை பெறமுடியும். மீண்டும் அதே லாரியின் பதிவு எண்ணில் மணல் பெற ஒருமாதம் காத்திருக்க வேண்டும். இதனால் கட்டுமான தேவைக்கு அரசு மணலை பெற காலதாமதமாகிறது. மேலும் அரசு குவாரியில் ரூ.2,800-க்கு பெறப்படும் மணல் வெளியே ரூ.25 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.

இதுபோன்ற பிரச்சினைகளினால் மணல் கடத்தல்காரர்களின் வியாபாரம் தற்போது அதிகாரிகள் உடந்தையுடன் தாராளமாக நடைபெற்று வருகிறது. காரைக்குடி பகுதிக்கு கல்லல், தேவகோட்டை, கண்ணங்குடியில் உள்ள விருசுழி ஆறு, தேனாறு உள்ளிட்ட ஆற்று படுகைகளில் இருந்தும், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்று படுகையில் இருந்தும் அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு கடத்தி வரப்படுகிறது. மணல் கடத்தல் மாபியாக்களுக்கு உள்ளூர் போலீசார் உடந்தையாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. நகரில் ஏதாவது முக்கிய நிகழ்ச்சி, போராட்டம் நடைபெற்றால் போலீசார் அனைவரும் அங்கு பாதுகாப்பு பணிக்காக சென்றுவிடுவர். இதனால் போலீஸ் நிலையங்களில் தலா ஒரு போலீஸ்காரர் மட்டும் பணியில் இருப்பார். இதுகுறித்து மணல் கடத்தல் மாபியாக்களுக்கு உடந்தையாக உள்ள போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். அந்த நேரத்தில் லாரிகள் மூலம் மணல் காரைக்குடியின் மற்ற பகுதிகளுக்கு கடத்தி விற்பனை செய்யப்படுகிறது. போலீசார் பணி முடிந்து திரும்புவதற்குள் ஏராளமான லாரிகளில் மணல் கடத்தப்பட்டுவிடும்.

மணல் கடத்தலில் பெரும் புள்ளிகளாக கருதப்படும் மாபியாக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து மணலை கடத்தி வந்து மாவட்ட எல்லையில் உள்ள தோட்டங்களில் பதுக்கி வைத்து, பின்னர் உள்ளூர் ஆர்டரின் பெயரில் விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற கடத்தல் மணல் விற்பனை தற்போது காரைக்குடி பகுதியில் அதிகரித்து உள்ளது. மேலும் லாரிகளில் மணலை ஏற்றி அதன்மீது செங்கல், கருங்கல்லை வைத்து மறைத்து நூதன முறையில் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கற்கள் தான் ஏற்றி செல்வதாக கருதி போலீசாரும் சோதிக்காமல் விட்டுவிடுகின்றனர். இதனால் காரைக்குடி பகுதியில் மணல் கடத்தல் குறித்து சமீப காலமாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மணல் கடத்தலை தடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 47 மணல் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 70-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த லாரிகள் அனைத்தும் தாலுகா அலுவலகம் முன்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

சில நேரங்களில் மணல் கடத்தல் லாரிகள் போலீசார் நிறுத்தினாலும் நிற்காமல் சென்றுவிடுகின்றன. அவ்வாறு செல்லும் லாரிகளை போலீசார் விரட்டி பிடித்து வருகின்றனர். ஆனால் லாரியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் போலீசார் திரும்பி விடுகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தானாக நேரில் சென்று மணல் கடத்தல் லாரிகளை பிடித்துள்ளார். ஆனால் மணல் கடத்தலுக்கு சில அதிகாரிகள் உடந்தையாக இருப்பதால் காரைக்குடியில் தொடர் மணல் கடத்தல் நடந்து கொண்டே இருக்கிறது. 

மேலும் செய்திகள்