நீர்வரத்து ஓடைகளை மறித்து கிராவல் மண் அள்ள அனுமதி: தடுக்க கோரி கலெக்டரிடம் மனு

காரியாபட்டி அருகே உள்ள கீழக் கள்ளங்குளம் கண்மாய்க்கு வரும் நீர்வரத்து ஓடைகளை மறித்து கிராவல் மண் அள்ளுவதை தடை செய்ய வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

Update: 2018-05-09 00:00 GMT
விருதுநகர்,

கலெக்டரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயமுருகன், செயலாளர் முருகன், சதுரகிரி ஆகியோர் நாசர்புளியங்குளம் கிராம விவசாயிகளுடன் வந்து கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

காரியாபட்டி தாலுகாவிற்கு உட்பட்டது மேலக்கள்ளங்குளம் மற்றும் கீழக் கள்ளங் குளம். இங்குள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் வரக் கூடிய ஓடைகளை மறித்து தற்போது செம்மண் கிராவல் மண் அள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே, அதேபகுதியில் கிராவல் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டது.

அதை தடுக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீர்கூட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி மனு அளித்தோம். இதையடுத்து ஏப்ரல் 25-ந் தேதி அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் அதே இடத்தில் செம்மண் கிராவல் மண் அள்ள கடந்த 2-ந் தேதி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படையும். எனவே, உடனடியாக அந்த அனுமதியை ரத்து செய்து கிராவல் மண் அள்ளுவதை தடுத்து நிறுத்திட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். 

மேலும் செய்திகள்