பிளஸ் வகை ஆடைகளுக்கு உயர்த்தப்பட்ட கட்டணத்தை வழங்க வேண்டும், நிட்டிங் உரிமையாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

பிளஸ் ஆடைகளுக்கான கட்டணங்களை உயர்த்தியபடி வழங்க வேண்டும் என நிட்டிங் உரிமையாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-05-08 22:52 GMT
திருப்பூர்,

சிம்கா-நிட்மா உள்ளிட்ட சங்கங்களின் கூட்டம் கடந்த மாதம் 4-ந் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பின்னலாடை துணி உற்பத்தி, ஆயத்த ஆடை, காலர்ஸ் மற்றும் கப்ஸ் உற்பத்திக்கான எந்திரங்கள், உதிர் பாகங்கள், மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திக்கான அனைத்து செலவினங்களும் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் கட்டண உயர்வை தவிக்க முடியாமல் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து உயர்த்தப்பட்ட கட்டண விவரங்கள் கடந்த 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கட்டணங்களை உயர்த்தி வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் பிளஸ் ஆடை நிட்டிங் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிம்கா சங்க தலைவர் விவேகானந்தன், நிட்மா சங்க செயலாளர் ராஜாமணி, சிம்கா செயலாளர் சிவானந்தம், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், நிட்மா இணைச்செயலாளர் கோபி உள்பட நிட்டிங் உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்டு நிட்டிங் உரிமையாளர்கள் அனைவரும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இதில் நிட்டிங் கட்டணங்களை உயர்த்தியபடி வழங்க வேண்டும், பிளஸ் வகை ஆடைகளுக்கு புதிய கட்டணம் ஒரு கிலோ நூலில் இருந்து பின்னலாடை தயாரிக்க ரூ.19 என நிர்ணயம் செய்யப்பட்டது. எனவே அதனை தொழில்துறையினர் வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்