ஈரோட்டில் தீக்குளித்து பெண் தற்கொலை காப்பாற்ற முயன்ற பாட்டியும் கருகி சாவு
ஈரோட்டில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற பாட்டியும் தீயில் கருகி இறந்தார்.;
ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையம் கிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் காஜா மைதீன். இவருடைய மனைவி ஜெமினா (வயது 25). இவர்களுக்கு ஆதில் (7) என்கிற மகன் உள்ளான். காஜா மைதீன் திருப்பூரில் உள்ள ஒரு இரும்புக்கடையில் வேலை செய்து வருகிறார். இதனால் அவர் தனது குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி இருந்தார்.
காஜாமைதீனுக்கும், ஜெமினாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஜெமினா கோபித்துக்கொண்டு ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்கு வந்தார். அங்கு ஜெமினாவை கணவருடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் உறவினர்களும் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் ஜெமினா ஈரோடு இந்திராநகர் கோட்டையார்வீதியில் உள்ள அவருடைய பாட்டி சபுரா (70) வீட்டிற்கு சென்றார். அப்போது அவரிடம், கணவருடன் சேர்ந்து வாழ வேண்டியதுதானே என்று சபுரா கூறிஉள்ளார். மேலும், குடும்ப பிரச்சினை குறித்து அவர்கள் நீண்ட நேரம் பேசி உள்ளனர்.
இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து மனவேதனையில் காணப்பட்ட ஜெமினா தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். பின்னர் வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்த அவர், வீட்டின் முன்பு மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த சபுரா வெளியே ஓடி வந்தார். அப்போது ஜெமினாவின் உடலில் பற்றி எரிந்த தீயை அவர் அணைக்க முயன்றார்.
இதில் சபுராவின் உடலிலும் தீப்பரவியது. எனவே தீயில் பேத்தியும், பாட்டியும் கருகினார்கள். இதைத்தொடர்ந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஜெமினாவும், சபுராவும் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.