முகநூலில் அறிமுகமான மாணவியை கடத்தியதாக 2 பேர் கைது

முகநூலில் அறிமுகமான மாணவியை கடத்தி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Update: 2018-05-08 22:42 GMT
கூடலூர்,

கூடலூர் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவரை காணவில்லை என அவரது பெற்றோர் கூடலூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காணாமல் போன மாணவி நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் உள்ளிட்ட தனிப்படை போலீசார் அங்கு சென்றனர்.

விசாரணையில் திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் மாணவியை கடத்தி சென்றது தெரிய வந்தது. பின்னர் அந்த மாணவியை போலீசார் மீட்டு கூடலூர் கொண்டு வந்தனர்.

விசாரணையில் அந்த மாணவிக்கு திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த வாலிபருடன் முகநூலில் (பேஸ்புக்) பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாணவியை நேரில் பார்க்க வருவதாக கூறி அந்த வாலிபர் தனது நண்பர்களுடன் கூடலூர் வந்தார். பின்னர் மாணவியை நேரில் சந்தித்த வாலிபர் தனது நண்பர்களுடன் அவரை கடத்தி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக நாகப்பட்டினம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த மதன் (வயது 23), அவரது நண்பர்கள் பார்த்தீபன் (23), செல்வராஜ் (43) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் பார்த்தீபன், செல்வராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மதனை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்