பாலிடெக்னிக் தேர்வு முறைகேட்டில் தொடர்பு: பொள்ளாச்சி கல்வி மாவட்ட கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்

பாலிடெக்னிக் தேர்வு முறைகேட்டில் தொடர்புடையதாக கைதான பொள்ளாச்சி கல்வி மாவட்ட கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2018-05-08 22:33 GMT
பொள்ளாச்சி,

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த நவம்பர் மாதம் 7-ந்தேதி வெளியிடப்பட்டது. இதில் 2,200 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் தேர்வில் முறைகேடு நடந்து உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் உமா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 156 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்.

இதில் 15-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் குணசேகரன் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 30-ந்தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் குணசேகரனை கைது செய்தனர். இதற்கிடையில் பள்ளி கல்வி இயக்குனர் இளங்கோவன் கண்காணிப்பாளர் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவு நகல் சென்னையில் இருந்து கோவை கல்வி மாவட்ட அலுவலகம் மூலம் பொள்ளாச்சி அலுவலகத்துக்கு வந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்