தனியார் மருந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு - ஆதரவு: புதுச்சேரியில் கோஷ்டிகளாக கல்வீசி தாக்குதல்: போலீஸ் தடியடி

புதுச்சேரி காலாப்பட்டில் மருந்து தொழிற்சாலைக்கு எதிராகவும், ஆதரவாகவும் கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். இதில் சரமாரி கல்வீசி தாக்கி கலவரத்தில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

Update: 2018-05-09 00:30 GMT
காலாப்பட்டு,

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் பெரிய காலாப்பட்டில் மருந்து, மாத்திரைகள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.

இந்த மருந்து தொழிற்சாலையில் தற்போது 4 ஆயிரம் டன் மூலப்பொருட்கள் உற்பத்தியாகிறது. இதை 9 ஆயிரம் டன் ஆக உயர்த்தும் வகையில் இந்த தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதற்காக இந்த நிறுவனத்தின் சார்பில் புதுச்சேரி அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். இதுபற்றிய விவரம் தெரியவந்ததை தொடர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தொழிற்சாலையால் ஏற்கனவே நிலத்தடி நீராதாரமும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் விரிவு படுத்துவதற்கு அனுமதி கொடுத்தால் மேலும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு உண்ணாவிரதப் போராட்டமும் நடந்தது.

இதைத்தொடர்ந்து பொதுமக்களின் கருத்தை அறிவதற்காக அரசு சார்பில் கருத்துக்கேட்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி காலாப்பட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்துக்கேட்பு கூட்டம் தொடங்கியது. இதையொட்டி இந்த தொழிற்சாலையை சுற்றி உள்ள பெரிய காலாப்பட்டு, சின்னக்காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, கனகசெட்டி குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் திருமண மண்டபம் முன்பு திரண்டு இருந்தார்கள்.

கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரி மாவட்ட கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத், வருவாய் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தனியார் மருந்து தொழிற்சாலை நிர்வாகிகள் வந்தபோது அங்கு திரண்டிருந்தவர்கள் மருந்து தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய அனுமதிக்க கூடாது. அந்த தொழிற்சாலையை மூடவேண்டும் என்று ஒட்டுமொத்தமாக கோஷம் எழுப்பினர். அதிகாரிகளுக்கு கருப்புக்கொடி காட்டியும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து, மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளை திருமண மண்டபத்துக்குள் அனுப்பினர்.

இதனால் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் இந்த கூட்டத்தில் கிராம மக்களும் கலந்து கொண்டனர். ஆனால் கூட்டம் தொடங்கும் முன்பே மீண்டும் அவர்கள் மருந்து தொழிற்சாலைக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பெரும் அமளி ஏற்பட்டதை தொடர்ந்து கிராம மக்களை அதிகாரிகள் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் இதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை.

இதையொட்டி கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தாமலேயே கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத் மற்றும் அதிகாரிகள் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறினார்கள். கிராம மக்களும் அங்கிருந்து வெளியேறினார்கள். இவர்களில் சிலர் காலாப்பட்டில், கிழக்கு கடற்கரைசாலையில் அமர்ந்து திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி-சென்னை சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதுபோன்ற சம்பவங்களால் அடுத்தடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

இந்தநிலையில் மருந்து தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒரு தரப்பினர் ஊர்வலமாக வந்தனர். அந்த நேரத்தில் திருமண மண்டபத்தைவிட்டு கலெக்டரும், அதிகாரிகளும் வெளியே வந்தனர். அவர்களிடம் தொழிற்சாலைக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் மாவட்ட கலெக்டரின் காரை முற்றுகையிட்டு கருத்து தெரிவித்து மனு கொடுக்க முயன்றனர்.

ஆனால் சூழ்நிலையை கருத்தில் கொண்டு போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி, கலெக்டரையும், அதிகாரிகளையும் அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அந்த சமயத்தில் தொழிற்சாலைக்கு ஆதரவாக திரண்டவர்கள் மீது அந்த பகுதியில் இருந்த ஒரு கட்டிடத்தின் மாடியில் இருந்து ஒரு கல் வந்து விழுந்தது.

இதனால் அந்த கும்பலில் இருந்தவர்கள் ஆத்திரம் அடைந்தனர். பதிலடியாக அவர்களும் கல்வீசினார்கள். இதைத்தொடர்ந்து தொழிற்சாலை ஆதரவாளர்கள் மற்றும் எதிரானவர்கள் என கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவர்மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து நிலைமை கட்டுக்கடங்காமல் போனதையொட்டி அங்கு பாதுகாப்புகாக இருந்த போலீசார் தடியடி நடத்தி இரு தரப்பினரையும் விரட்டியடித்தனர். இதில் ஒரு சிலர் சிதறி ஓடினார்கள். சிலர் தொடர்ந்து கோஷ்டியாக மோதலில் ஈடுபட்டனர். போலீசாரை நோக்கியும் கற்களை வீசினார்கள். இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர்.

ரோடு ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை கீழே தள்ளி சேதப்படுத்தினார்கள். தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினார்கள். மொத்தம் 8 ரவுண்டுகள் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. அதைத்தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதன் பிறகு கலவரம் கட்டுக்குள் வந்தது. தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோஷ்டி மோதல், போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீச்சின் போது தப்பி ஓடியவர்களின் விலை உயர்ந்த செல்போன்கள் கீழே விழுந்து உடைந்து கிடந்தன. செருப்புகளும், வீசி எறிந்த கற்களும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. இதனால் அந்த பகுதியே போர்க்களம்போல் காட்சி அளித்தது.

அதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களையும் போலீசார் விரட்டி அடித்தனர். அதன் பின்னர் அங்கு போக்குவரத்து சீரானது.

இந்த கலவரத்தின்போது போலீசார் மீது கற்கள் வீசப்பட்டதில் சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ், போலீஸ்காரர்கள் தவவேலவன் (28), வினோத்குமார் (25), தீனதயாளன் (29), சக்திவேல் முருகன் (29), வேலவன் (33), வினோத் (37) ஆகிய 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் போலீசார் நடத்திய தடியடியில் பெரியகாலாப்பட்டை சேர்ந்த வேலு (43), என்பவர் பலத்த காயம் அடைந்தார். மேலும் ஒரு பெண்ணும் காயம் அடைந்தார். அவரைப் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. காயம் அடைந்த வேலுவும் சிகிச்சைக்காக பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கலவரம் பற்றி தகவல் அறிந்து போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், போலீஸ் டி.ஐ.ஜி.சந்திரன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி ஆகியோர் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். தற்போது அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீஸ் ரோந்து மற்றும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் தனியார் மருந்து தொழிற்சாலைக்கும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்