தனியார் மருந்து தொழிற்சாலை விவகாரம்: கிரண்பெடியிடம் அசோக் ஆனந்து எம்.எல்.ஏ. புகார்

தனியார் மருந்து தொழிற்சாலை விரிவாக்க விவகாரம் தொடர்பாக கவர்னர் கிரண்பெடியிடம் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்து புகார் அளித்தார்.

Update: 2018-05-09 00:15 GMT
புதுச்சேரி,

புதுவை காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருந்து தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அசோக் ஆனந்து எதிர்ப்பு தெரிவித்தார். நேற்று காலாப்பட்டில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் சென்றிருந்தார்.

ஆனால் அங்கு கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். மேலும் கருத்துக்கேட்பு கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அசோக் ஆனந்து எம்.எல்.ஏ. நேற்று பிற்பகலில் கவர்னர் கிரண் பெடியை சந்தித்து பேசினார். அப்போது, தனியார் மருந்து தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கூறி மனு அளித்தார். இதுதொடர்பாக கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளையும் அவர் கவர்னரிடம் வழங்கினார்.

உடனே சுற்றுச்சூழல் துறை செயலாளர் பார்த்திபனை கவர்னர் கிரண்பெடி அழைத்து இந்த பிரச்சினை குறித்து ஆய்வு நடத்துமாறு கூறினார். அந்த தொழிற் சாலைக்கு அனுமதி கொடுக் கப்பட்ட விவரங்களை அவர் கேட்டுள்ளார்.

இது தொடர்பான விவரங்கள் கிடைக்கும் வரை மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார். முழு ஆய்வுக்கு பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கையை இந்த விஷயத்தில் எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்