கர்நாடகத்தில் ஆட்சியை பிடிப்பது உறுதி வருணா, கே.ஆர். தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) வெற்றி பெறாது எச்.டி.தேவேகவுடா பேச்சு

கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆட்சியை பிடிப்பது உறுதி என்றும், ஆனால் வருணா, கே.ஆர். தொகுதிகளில் வெற்றி பெறாது என்றும் எச்.டி.தேவேகவுடா கூறினார்.

Update: 2018-05-08 22:30 GMT

மைசூரு,

கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆட்சியை பிடிப்பது உறுதி என்றும், ஆனால் வருணா, கே.ஆர். தொகுதிகளில் வெற்றி பெறாது என்றும் எச்.டி.தேவேகவுடா கூறினார்.

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 12–ந்தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கர்நாடக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட தேசிய தலைவர்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா நேற்று மைசூருவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அவர், வருணா, சாமராஜா, கிருஷ்ணராஜா உள்ளிட்ட தொகுதியில் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது:–

ஜனதா தளம்(எஸ்) வெற்றி பெறாது

கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளது. இதனால் மாநிலத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்பது உறுதி. மைசூருவில் இதுவே எனக்கு கடைசி பிரசாரமாக கூட இருக்கலாம். சாமராஜா தொகுதியில் மைசூரு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.எஸ்.ரங்கப்பா வெற்றி பெறுவது உறுதி.

ஆனால், கிருஷ்ணராஜா, வருணா தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவான அலை இல்லை. இதனால் அந்த தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற மாட்டார்கள். இதனை நானே கூறுகிறேன். மற்ற தொகுதிகளில் நமது கட்சிக்கு ஆதரவான அலை உள்ளது. இதனால் அந்த தொகுதிகளில் நமது வேட்பாளர்கள் கட்டாயம் வெற்றி பெறுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்