கொடுத்த காரியத்தை பரிபூரணமாக செய்தால் புகழ் தேடிவரும் சக்தி அம்மா பேச்சு
கொடுத்த காரியத்தை பரிபூரணமாக செய்தால் புகழ் தேடி வரும் என்று சக்தி அம்மா பேசினார்.
வேலூர்
நாராயணிபீடத்தின் 26-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு உலக அமைதிக்காகவும், இயற்கை வளத்திற்காகவும் நாராயணி பீடத்தின் கருவறையில் யந்திரவடிவாக உள்ள நாராயணி அம்மனுக்கு, பக்தர்கள் தங்கள் கைகளாலேயே மஞ்சள்நீர் அபிஷேகம் செய்தனர்.
இதற்காக மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் நாராயணி வித்யாலயா பள்ளி வளாகத்தில் இருந்து 10,008 மஞ்சள்நீர் கலசங்களுடன் நாராயணி பீடத்திற்கு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தை சக்தி அம்மா தொடங்கி வைத்தார். குதிரைகள், யானைகள், செண்டை மேளம், கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் பக்தர்கள் நாராயணி பீடத்திற்கு சென்றனர். அங்கு யந்திர வடிவான நாராயணி அம்மனுக்கு தங்கள் கைகளாலேயே அபிஷேகம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து உலக அமைதிக்காகவும், இயற்கை வளத்திற்காகவும் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜெகத்பிரகாஷ் நட்டா, பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கலெக்டர் ராமன், போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் நாராயணி நர்சிங் கல்லூரியில் நடந்த விழாவில் நாராயணி அரங்கத்தை சக்தி அம்மா, மத்திய மந்திரி ஜெகத்பிரகாஷ் நட்டா ஆகியோர் திறந்து வைத்து குத்து விளக்கேற்றினர். நாராயணி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடத்தில் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மத்திய மந்திரி கேட்டறிந்தார்.
கடந்த 93-ம் ஆண்டு நாராயணி அம்மன் சுயம்புவாக தோன்றினார். ஒரு சிலையை மனிதர்கள், ரிஷிகள், தேவர்கள், அசுரர்கள்தான் பிரதிஷ்டை செய்வார்கள். ஆனால் நாராயணி திடீர் என்று சுயம்புவாக தோன்றினார். இப்போது இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்றால் பலருடைய அன்பு, சேவை, தியாகம்தான் காரணம். நீங்களும் உங்கள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும். அனைவருக்கும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. படிப்பு என்ற தகுதி கிடைத்துள்ளதை நன்கு பயன்படுத்தி ஆத்மார்த்தமாக சேவை செய்ய வேண்டும். புகழ், பணத்திற்காக செய்தால் வாழ்க்கையில் சாதிக்க முடியாது. நமக்கு கொடுக்கப்பட்டுள்ள காரியத்தை பரிபூரணமாக செய்தால் புகழ் தானாக தேடி வரும். இதற்கு முன்பு வருடத்திற்கு ஒருமுறை வரும் பொங்கல், தீபாவளி போன்று டாக்டர்களிடம் செல்வார்கள். ஆனால் இன்று வாரம் ஒருமுறை செல்கிறார்கள்.
எனவே நீங்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். வாழ்க்கையில் முன்னேற கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சாதிக்க வேண்டும். செய்யும் தொழிலை முழு ஈடுபாட்டுடன் செய்தால் அதில் நிச்சயமாக வெற்றி பெறலாம். சந்தர்ப்பங்கள் அதிகம் இருந்தாலும், அது சிலருக்கு மட்டுமே கிடைக்கும். அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. அதை நீங்கள் பயன்படுத்தி சாதிக்க வேண்டும்.
சிலர் தனக்கு படிப்பே வராது என்பார்கள், அவர்களிடம் அன்பு என்ற ஒன்று இருக்கும். வரும் நோயாளிகளிடம் நீங்கள் அன்பு காட்டவேண்டும். அதற்கான அன்பை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சியில் நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ்பாபு, அறங்காவலர்கள் சவுந்தரராஜன், கலையரசன், ராமலிங்கம், சிங்கப்பூரை சேர்ந்த உ.ஒய்.சுங், நாராயணிபீட மேலாளர் சம்பத், நாராயணி நர்சிங் கல்லூரி முதல்வர் சுஜாதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.