தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த அரசு முயற்சி செய்து வருகிறது
வருங்கால வைப்புநிதி செலுத்தும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த அரசு முயற்சி செய்து வருவதாக வருங்கால வைப்புநிதி ஆணையர் ஜாய் கூறினார்.
வேலூர்
வருங்கால வைப்புநிதி செலுத்தும் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. வேலூர் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் எஸ்.டி.சிங் தலைமை தாங்கினார். சென்னை மற்றும் புதுச்சேரி வருங்கால வைப்புநிதி அதிகாரி சர்வேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக வருங்கால வைப்புநிதி ஆணையர் வி.பி.ஜாய் கலந்துகொண்டு பேசினார். இதில் கலந்துகொண்ட தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் தங்கள் சந்தேகங்கள் குறித்து கேள்விகள் எழுப்பினர்.
தொழிலாளர்களுக்கு தற்போது ரூ.1000, ரூ.1,500 என வழங்கப்படும் ஓய்வூதியம் போதியதாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஓய்வூதியத்தை உயர்த்தும் திட்டம் உண்டா? என்று கேட்கிறார்கள். தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்த அரசு முயற்சி செய்து வருகிறது.
குறிப்பாக தொழிலாளர்கள் எவ்வளவு காலம் பணிபுரிந்தார்கள் என்பதைவிட அவர்கள் எவ்வளவு வருங்கால வைப்புநிதி செலுத்துகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் ஓய்வூதியம் வழங்கப்படும்.
தொழில் நிறுவனங்கள், முதலாளிகள், வருங்கால வைப்புநிதி அலுவலகங்கள் சேர்ந்து நடவடிக்கை எடுத்தால்தான் தொழிலாளர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். தொழிலாளர்கள் தங்கள் பெயரில் உள்ள வருங்கால வைப்புநிதியை எடுத்து செலவு செய்து விடக்கூடாது.
உங்கள் எதிர்காலத்துக்கானது தான் வருங்கால வைப்புநிதி. எனவே நீங்கள் ஓய்வு பெற்ற பின்னர் அதை எடுத்து பயன்படுத்துங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.