கவர்ச்சிகரமாக பேசுவதால் ஏழைகளின் வயிறு நிறையாது பிரதமர் மோடி மீது சோனியா காந்தி கடும் தாக்கு
கவர்ச்சிகரமாக பேசுவதால் ஏழைகளின் வயிறு நிறையாது என்று பிரதமர் மோடி மீது சோனியா காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.
பெங்களூரு,
கவர்ச்சிகரமாக பேசுவதால் ஏழைகளின் வயிறு நிறையாது என்று பிரதமர் மோடி மீது சோனியா காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.
கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம்கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி நேற்று விஜயாப்புரா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:–
கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு சிறப்பான முறையில் செயலாற்றி உள்ளது. முதல்–மந்திரி சித்தராமையா பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறார். அனைத்து துறையிலும் கர்நாடகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் செயல்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் பல்வேறு திட்டங்களுக்கு தற்போதைய மத்திய அரசு முன்னுரிமை கொடுக்கவில்லை.
அவமானப்படுத்திவிட்டார்கர்நாடகத்தில் நிலவிய கடுமையான வறட்சியை சித்தராமையா சிறப்பான முறையில் நிர்வகித்தார். இதற்கு மத்திய அரசு போதிய நிதி உதவியை அளிக்கவில்லை. கர்நாடக மக்கள் பிரச்சினையை பற்றி பேச நேரில் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு சித்தராமையா கேட்டார். ஆனால் பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை. இதன் மூலம் முதல்–மந்திரியை மட்டுமின்றி கர்நாடக மக்களை மோடி அவமானப்படுத்திவிட்டார். இதற்கு கர்நாடக மக்கள் தக்கபாடம் புகட்ட வேண்டும்.
நிதி ஒதுக்குவதில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு குறைந்த அளவில் நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு பாரபட்சமாக பார்க்கிறது. இது தான் உங்களின் “சப்கா சாத் சப்கா விகாஸ்“ (அதாவது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்தும்) திட்டமா?. நடிகரை போல் மோடி நன்றாக பேசுகிறார். ஆனால் இந்த பேச்சு மக்களுக்கு உணவு அளிக்காது.
ஏழைகளின் வயிறு நிறையாதுஇப்படி கவர்ச்சிகரமாக பேசுவதால் ஏழைகளின் வயிறு நிறையாது. வெறும் பேச்சு வேலை வாய்ப்புகளை உருவாக்காது. வெறும் பேச்சால் வயிறு நிரம்புவதாக இருந்தால் நீங்கள்(மோடி) இன்னும் அதிகமாக பேசுங்கள். வெறும் பேச்சால் மக்களின் பிரச்சினைகள் தீராது. நோய்கள் சரியாகாது. வயிறு நிரம்ப வேண்டுமென்றால் உணவு வேண்டும்.
நோய்கள் தீர வேண்டுமென்றால் மருத்துவமனைகள் வேண்டும். சித்தராமையா ஆட்சி மீது பொய்யான ஊழல் புகார்களை மோடி கூறுகிறார். அவர் எங்கு சென்றாலும் பொய் பேசுகிறார். வரலாற்றை நிர்மாணம் செய்தவர்களை அவமானப்படுத்துகிறார். இது பிரதமர் பதவிக்கு நல்லதல்ல. இத்தகைய மோசமான பிரதமரை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?.
வாக்குறுதி என்ன ஆனது?கடந்த 4 ஆண்டுகளில் நீங்கள் செய்தது என்ன?. வெறும் பேச்சு மட்டுமே பேசி இருக்கிறீர்கள். ஊழலை ஒழிப்பதாக சொன்ன உங்களின் வாக்குறுதி என்ன ஆனது?. லோக்பால் அமைப்பை எப்போது ஏற்படுத்துவீர்கள்?. ஊழல்வாதிகளை அருகில் உட்கார வைத்துக்கொண்டு ஊழல் ஒழிப்பு பற்றி பேசுகிறீர்கள்.
கர்நாடகத்தில் 22 லட்சம் விவசாயிகளின் விவசாய கடனை காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்தது. விவசாயிகளின் நலனில் சித்தராமையா மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறார். விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை சித்தராமையா அமல்படுத்தி உள்ளார்.
விலைவாசி உயர்ந்துவிட்டதுஇந்தியாவின் ஏற்றுமதியில் கர்நாடகத்தின் பங்கு முக்கியமானதாக உள்ளது. காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்குவதாக மோடி சொல்கிறார். முதலில் இன்று உங்களின் நிலை என்ன என்று நீங்கள் பாருங்கள். நாட்டில் விலைவாசி உயர்ந்துவிட்டது. கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. கர்நாடக மக்கள் மீண்டும் ஒரு முறை காங்கிரசை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.