மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைந்துள்ளது மருத்துவப்பணிகள் இயக்குனர் பேட்டி

சேலம் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைந்துள்ளது என்று மாநில குடும்ப நல மருத்துவப்பணிகள் இயக்குனர் டாக்டர் பானு கூறினார்.

Update: 2018-05-08 22:45 GMT
ஓமலூர்

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சில தனியார் மருத்துவமனைகளில் கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என பார்த்து பாலினத்தை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் காரணமாக ஆத்தூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் மாநில குடும்ப நல மருத்துவப்பணிகள் இயக்குனர் டாக்டர் பானு ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் அவர் திடீரென்று ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது மகப்பேறு பிரிவு, குழந்தைகள் பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மேலும் அங்கு கர்ப்பிணிகளுக்கு உரிய பரிசோதனைகள் செய்யப்படுகிறதா? என்பது குறித்து கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து மருத்துவப்பணிகள் இயக்குனர் டாக்டர் பானு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் பெருமளவில் குறைந்துள்ளது. இதற்கு காரணம் சில தனியார் மருத்துவமனைகள் கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என பார்த்து பாலினத்தை கூறி வந்துள்ளனர். பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்துள்ளனர். இதன் காரணமாக தான் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைந்துள்ளது.

இதன் அடிப்படையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், தலைமை செயலாளர் ஆணையின்படி அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. இனிவரும் காலங்களில் சேலம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கரு உண்டாகாமல் இருக்க கருத்தடை சாதனங்கள், கருத்தடை ஊசிகள், மாத்திரைகள் உள்ளன. இது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது. இதனை வாங்கி பயன்படுத்தலாம். ஆனால் கரு உண்டான பின்னர் அது ஆணா? பெண்ணா? என பார்த்து கலைப்பது சட்டப்படி குற்றமாகும்.

ஆய்வின் போது சேலம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் வளர்மதி மற்றும் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் டாக்டர் சத்யா உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்