அதிகாரிகள் முன்னிலையில் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
சேலம் அருகே பொது சுகாதார வளாகத்தை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் முன்னிலையில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
சேலம்
சேலம் அருகே உள்ள வீராணம் பச்சையம்மன் நகரில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொது சுகாதார வளாகம் ஒன்று கட்டப்பட்டது. பின்னர் இந்த சுகாதார வளாகம் திடீரென மூடப்பட்டது. இதை திறக்கக் கோரி ஒரு தரப்பினர் அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்தனர்.
இதனிடையே சுகாதார வளாகத்தை நிரந்தரமாக மூடக்கோரி மற்றொரு தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த பிரச்சினை குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த பொது சுகாதார வளாகத்தை திறக்க அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று சேலம் தாசில்தார் திருமாவளவன், அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்றனர். முன்னதாக அங்கு வீராணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அதிகாரிகள் மூடிக்கிடந்த சுகாதார வளாகத்தை திறக்க சென்றனர். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்லிகா(வயது 45), விமலா (37) ஆகியோர் திடீரென மண்எண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பெண்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக மல்லிகா, விமலா ஆகியோர் மீது வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.