பெண் மர்மசாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

ஆலங்குடி அருகே பெண் மர்மமான முறையில் இறந்தார். இதனால் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-05-08 22:45 GMT
ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள ஏ.மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி கலையரசி (வயது 31). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கலையரசிக்கும், மாரிமுத்துவுக்கும் இடையே தொடர்ந்து குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6-ந் தேதி கலையரசி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாரிமுத்துவின் உறவினர்கள் கலையரசியை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கலையரசி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தகவல் அறிந்த கலையரசியின் சகோதரர் மற்றும் உறவினர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் கலையரசியை, அவரது கணவர் மாரிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் அடித்துக் கொலை செய்து விட்டனர் என சம்பட்டு விடுதி போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கலையரசின் உடலை அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் வாங்க மறுத்து விட்டனர். கலையரசிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், புதுக்கோட்டை உதவி கலெக்டர் கே.எம்.சரயு விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலையில் கலையரசியின் உறவினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் புதுக்கோட்டையில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தின் முன்பு நின்று கொண்டு, கலையரசின் சாவில் மர்மம் உள்ளது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு, கதறி அழுதனர். இது குறித்து அறிந்த உதவி கலெக்டர் கே.எம்.சரயு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கலையரசியை அவரது கணவர் மாரிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டு கொலை செய்துவிட்டனர். இதனால் அவர்களை கைது செய்தால் தான் நாங்கள் உடலை பெற்று கொள்வோம் என கலையரசியின் உறவினர்கள் கூறினர். தொடர்ந்து உதவி கலெக்டர் கே.எம்.சரயு கூறுகையில், கலையரசியின் இறப்பில் உண்மை என்ன வென்று கண்டிப்பாக விசாரித்து அதற்கு ஏற்றாற்போல் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் எனக்கூறினார். இதைத்தொடர்ந்து கலையரசியின் உறவினர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து கலையரசியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்