நாங்குநேரி அருகே சொந்த கிராமத்தில் 24 குண்டுகள் முழங்க போலீஸ் ஏட்டு உடல் அடக்கம் உறவினர்கள்– பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

மணல் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு உடல், நாங்குநேரி அருகே சொந்த கிராமத்தில் 24 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது

Update: 2018-05-08 22:00 GMT

நெல்லை,

மணல் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு உடல், நாங்குநேரி அருகே சொந்த கிராமத்தில் 24 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. உறவினர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

போலீஸ் ஏட்டு கொலை

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கீழசிந்தாமணியை சேர்ந்த செபஸ்தியான் மகன் ஜெகதீஷ்துரை (வயது 34). நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வந்தார். வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்ற போது மணல் கொள்ளையர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

அவரது உடலை மீட்ட வடக்கு விஜயநாராயணம் போலீசார் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

உறவினர்களிடம் ஒப்படைப்பு

ஏட்டு ஜெகதீஷ்துரையின் உறவினர்கள் நேற்று 2–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சந்தித்து வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேசினார். ஜெகதீஷ்துரையின் மரணத்தை வீரமரணம் என்று அறிவிக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறி வந்தனர். அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நேற்று மதியம் 2.45 மணிக்கு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஏட்டு ஜெகதீஷ் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி

மாலை 3.45 மணி அளவில் ஜெகதீஷ்துரை உடல் சொந்த ஊரான கீழசிந்தாமணிக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கிராம மக்கள், உறவினர்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அப்போது, மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

தொடர்ந்து அங்குள்ள தஸ்நேவிஸ் ஆலயத்துக்கு ஏட்டு உடல் கொண்டு செல்லப்பட்டு அடக்க ஆராதனை மற்றும் நற்கருணை நடந்தது. அங்கிருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது. போலீசார் மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

24 குண்டுகள் முழங்கின

ஊருக்கு அருகில் உள்ள கல்லறை தோட்டத்தில் ஏட்டு ஜெகதீஷ்துரை உடல் வைக்கப்பட்டது. தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேஸ்குமார் யாதவ், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், நெல்லை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) முத்துராமலிங்கம், போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், நெல்லை துணை கமி‌ஷனர் சுகுணாசிங், சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், தாசில்தார் வர்க்கீஸ், வடக்கு விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தள நேவல் போலீஸ் அதிகாரிகள் வினோத், கார்த்திக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் திரண்டு வந்து ஏட்டு ஜெகதீஷ் துரை உடலுக்கு மலர் வளையம், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதன்பிறகு ஏட்டு மீது போர்த்தப்பட்டு இருந்த தேசிய கொடி அகற்றப்பட்டது. பின்னர் 24 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெகதீஷ்துரை உடல் அடக்கம் செய்யப்பட்டது.

--–

(பாக்ஸ்கள்) ஏட்டு உடலை தூக்கி வந்த போலீஸ் உயர் அதிகாரிகள்

ஏட்டு ஜெகதீஷ் துரை உடல், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது. உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் இருந்து ஏட்டு உடலை போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், துணை கமி‌ஷனர் சுகுணாசிங் மற்றும் போலீசார் தூக்கி வந்தனர். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் கண்கலங்கினர். ஏட்டுவின் உடலை போலீஸ் அதிகாரிகளே தூக்கி வந்த சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அதன்பிறகு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு கீழசிந்தாமணிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்