நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தற்கொலைக்கு முயன்ற தொண்டரை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தற்கொலைக்கு முயன்ற ம.தி.மு.க. தொண்டரை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Update: 2018-05-08 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே உள்ள முனியன்வயல் பகுதியை சேர்ந்தவர் ஜகுபர்அலி (வயது 50). ம.தி.மு.க.வின் தீவிர தொண்டர். இவர் நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், காவிரி விவகாரம் போன்ற பிரச்சினைகளில் கட்சி சார்பில் நடைபெறும் போராட்டங்களில் தீவிரமாக பங்கு பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தனது குடும்பத்தினரிடம் நீட் தேர்வு குளறுபடி குறித்து கவலையுடன் பேசியுள்ளார்.

பின்னர் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஜகுபர் அலியை மீட்டு சிகிச்சைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ஜகுபர்அலி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அறிந்த ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நேற்று முன்தினம் நள்ளிரவு தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டைக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் ஜகுபர் அலியை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவியை வழங்கினார். அப்போது ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

பின்னர் வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமீப காலமாக காவிரி விவகாரம், நீட் பிரச்சினை தொடர்பாக பல இளைஞர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். இது வேதனைக்குரியதாக உள்ளது. எனவே இளைஞர்கள் தங்களுடைய உயிர்களை மாய்த்து கொள்ளாதீர்கள். எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. வாழ்ந்து போராடுவோம்.

மத்திய அரசு தமிழகத்தை பழிவாங்கும் நோக்கத்தோடு நீட் தேர்வை கொண்டு வந்து உள்ளது. நீட் தேர்வு என்பது தமிழகத்தின் சமூக நீதிக்கான கேடு. தமிழகத்தில் இல்லாத தேர்வு மையங்களா?. மாணவர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு தான் திட்டமிட்டு தேர்வு மையங்களை மத்திய அரசு வேறு மாநிலத்தில் அமைத்துள்ளது. தற்போது மனித உரிமை ஆணையம் இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதன் முடிவு எப்படி இருக்கும் என்பதை தற்போது கூறமுடியாது. தமிழகத்திற்கு நீட் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்