சிதம்பரம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

சிதம்பரம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். வேலை கிடைக்காததால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

Update: 2018-05-08 22:15 GMT
சிதம்பரம்

சிதம்பரம் அருகே உள்ள கனகரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேலு. இவருடைய மகன் பிரபு(வயது 29). பாலிடெக்னிக் கல்லூரியில் கணினி அறிவியல் படித்துள்ள இவர், பல நிறுவனங்களில் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரபு, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக நேற்று முன்தினம் மாலையில் ஒரு கடையில் விஷம் வாங்கிக்கொண்டு, சித்தலப்பாடி டாஸ்மாக் கடைக்கு சென்றார்.

அங்கு மதுவாங்கிய பிரபு, அதற்குள் விஷத்தை ஊற்றி கலந்து குடித்தார். பின்னர் அங்கிருந்து அவர், வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் வயிற்று வலியால் பிரபு துடித்தார். இது குறித்து அவர், தனது சித்தப்பா கந்தசாமியை செல்போனில் தொடர்பு கொண்டு, தான் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டதாக கூறினார். இதனால் அவர் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்கு ஓடி வந்தார். அங்கு மயங்கிய நிலையில் கிடந்த பிரபுவை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கந்தசாமி மீட்டார். பின்னர் உடனடியாக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரபு அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலையில் பிரபு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்