விருத்தாசலம் அருகே மருந்து கம்பெனி ஊழியர் மர்ம சாவு

விருத்தாசலம் அருகே மருந்து கம்பெனி ஊழியர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-05-08 21:45 GMT
விருத்தாசலம்

விருத்தாசலம் அருகே தாழநல்லூர் ரெயில்வே பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள முட்புதரில் நேற்று முன்தினம் இரவு ஆண் ஒருவர் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இதுபற்றி விருத்தாசலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பிணமாக கிடந்த நபரை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மதுரை ஜெயந்திபுரம் பகுதியை சேர்ந்த தனியார் மருந்து கம்பெனி ஊழியர் அருண்ஜூலியட் (வயது 42) என்பதும், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த வேலை காரணமாக சென்னை சென்றுவிட்டு, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்ட அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி பயணம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அருண் ஜூலியட் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்ஜூலியட் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது ரெயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து ரெயிலில் இருந்து முட்புதரில் வீசிச்சென்றனரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். உயிரிழந்த அருண்ஜூலியட்டுக்கு லீமா(39) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்