போலீஸ் அதிகாரியை கண்டித்து சாலையின் குறுக்கே வேன்களை நிறுத்தி டிரைவர்கள் மறியல்

பெரம்பலூர் போலீஸ் அதிகாரியின் செயலை கண்டித்து வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர், சாலையின் குறுக்கே வேன்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-05-08 23:00 GMT
பெரம்பலூர்,

சென்னையில் நேற்று ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் நடத்திய போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் சென்னைக்கு செல்வதற்கான வேன்களை வாடகைக்கு பேசி அதில் செல்வதாக முடிவெடுத்திருந்தனர். அதன்படி, பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள வேன் ஓட்டுனர்களை அணுகி, சென்னைக்கு செல்ல தயாராக இருந்தனர்.

இதனிடையே பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட வேன் டிரைவர்களை நேற்று முன்தினம் இரவு அணுகி சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு செல்லக்கூடாது என எச்சரித்தனர். மேலும் சில டிரைவர்களிடம் இருந்து அவர்களது வேன்களின் சாவிகளை போலீசார் எடுத்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேன் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர், போலீசாரின் செயலை கண்டித்தும் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் மற்றும் வாகனங்கள் நுழையும் வழியை மறித்து பிரதான சாலையின் குறுக்கே வேன்களை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் தலைமையில், போலீசார் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், டிரைவர்களிடம் இருந்து எடுத்துச்சென்ற வேன் சாவிகளை உடனடியாக திரும்ப ஒப்படைப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், புதிய பஸ் நிலையம் அருகே பிரதான சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் எதிரெதிர் திசைகளில் வந்த பஸ்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. புதிய பஸ்நிலையத்தில் இருந்து வெளிச்சென்ற பஸ்கள் 4 ரோடு வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பும், பதட்டமும் நிலவியது. 

மேலும் செய்திகள்