தூத்துக்குடி வர்த்தக சங்க தலைவர் வீட்டில் கல்வீச்சு: போலீஸ் நிலையம் முன்பு வியாபாரிகள் சாலை மறியல்

தூத்துக்குடியில், வர்த்தக சங்க தலைவர் வீட்டில் கல்வீசிய மர்மநபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் நிலையம் முன்பு வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2018-05-08 21:00 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில், வர்த்தக சங்க தலைவர் வீட்டில் கல்வீசிய மர்மநபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் நிலையம் முன்பு வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

வீட்டில் கல்வீச்சு

தூத்துக்குடி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவர் தூத்துக்குடி நகர வர்த்தகர்கள் மத்திய சங்க தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு விநாயகமூர்த்தி வீட்டின் மீது மர்ம மனிதர் கல் வீசியதாக கூறப்படுகிறது. இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.

இந்த சம்பவம் குறித்து விநாயகமூர்த்தியின் மகன் பால் தங்கராஜேஷ் (வயது 33) தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் ஏராளமான வியாபாரிகள் நேற்று மதியம் மத்தியபாகம் போலீஸ் நிலையம் வந்தனர். அவர்கள் திடீரென போலீஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், விநாயகமூர்த்தி வீட்டில் கல் வீசிய மர்ம நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி கோ‌ஷங்கள் எழுப்பினர். அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்