துப்பாக்கி முனையில் பணம்-நகைகள் கொள்ளை: வங்கி மேலாளர்-ஊழியர்களிடம் போலீசார் விசாரணை

மன்னார்குடி அருகே வங்கியில் துப்பாக்கி முனையில் பணம்-நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக வங்கியின் மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் 6 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

Update: 2018-05-08 23:00 GMT
சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த அசேஷம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கு நேற்று முன்தினம் மதியம் காரில் வந்த மர்ம நபர்கள் 5 பேர், துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி ரூ.6 லட்சம் பணம் மற்றும் 10½ பவுன் நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு தலைமறைவாகி விட்டனர். மன்னார்குடி பகுதியில் முதல் முறையாக துப்பாக்கி முனையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கியின் மேலாளர் கோவிந்தராஜ், மன்னார்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் கொள்ளை நடந்த வங்கிக்கு மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், இன்ஸ்பெக்டர் மணிவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இவர்களை தொடர்ந்து தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன் ஆகியோரும் வங்கிக்கு வந்து பார்வையிட்டு கொள்ளை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மத்திய மண்டல ஐ.ஜி வரதராஜன் கொள்ளை சம்பவம் நடைபெற்ற வங்கிக்கு வந்து பார்வையிட்டதுடன் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார். மேலும் இந்த கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையர்களை விரைந்து பிடிக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த 4 தனிப்படைகளுடன் மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மொத்தம் 6 தனிப்படைகள் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த தனிப்படை போலீசார் நேற்று வங்கி மேலாளர் கோவிந்தராஜ் மற்றும் ஊழியர்களிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரனை மேற்கொண்டனர்.

கொள்ளையர்களின் அடையாளம், அவர்கள் அணிந்து வந்த உடைகள் குறித்தும், அவர்கள் பேசிய மொழி குறித்தும் தனிப்படை போலீசார் கேட்டறிந்தனர். கொள்ளையர்களுக்கு வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் யாரேனும் உதவி செய்தார்களா? என்று வங்கி மேலாளரிடமும், வங்கி ஊழியர்களிடமும் தீவிர விசாரனை செய்தனர்.

மேலும் கொள்ளையர்கள் வந்த காரின் எண் மற்றும் விபரம் குறித்து வங்கி ஊழியர்கள் யாரும் கவனித்தார்களா? வங்கியின் எச்சரிக்கை மணி ஒலிக்காதது ஏன்? என்பது போன்ற ஏராளமான கேள்விகளை ஊழியர்களிடம் போலீசார் கேட்டனர்.

பணம், நகைகளை கொள்ளையடித்த பின்னர் கொள்ளையர்கள், காரில் மன்னார்குடி நோக்கி சென்றதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து மன்னார்குடி நோக்கி செல்லும் சாலையில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கடந்த பத்து நாட்களில் பதிவான காட்சிகள் குறித்த பதிவுகளை ஒரு தனிப்படை குழுவினர் ஆராய்ந்து கொள்ளையர்கள் குறித்து ஏதேனும் துப்பு கிடைக்குமா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களில் ஒருவன், திருநெல்வேலி பாஷையில் பேசியதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் ஒரு தனிப்படை குழுவினர், வங்கியில் கிடைத்த கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை எடுத்துக்கொண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் பகுதிக்கு சென்று அங்குள்ள பழைய கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புறப்பட்டு சென்றுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1½ கோடி மோசடி செய்த வழங்கில் கைதாகி தற்போது ஜாமீனில் உள்ள மன்னார்குடி நடராஜ பிள்ளை தெருவை சேர்ந்த ராஜா, மன்னார்குடியை சேர்ந்த நகை மதிப்பீட்டாளர் ஆறுமுகம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த நகை மதிப்பீட்டாளர் சங்கர் ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் சிறையில் இருந்தபோது சிறையில் இருந்த சக கைதிகள் குறித்தும் விசாரணை செய்ததாக தெரிகிறது.

இவர்கள் சிறையில் இருந்த காலகட்டத்தில் இவர்களிடம் இந்த வங்கி பற்றியும் அதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் அறிந்துகொண்டு பழைய குற்றவாளிகள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமோ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதால், விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என தனிப்படையில் இடம்பெற்றுள்ள போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்