திருக்கோவிலூர் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி தீவிரம்
திருக்கோவிலூர் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த புறவழிச்சாலையில் 3 மாதத்தில் போக்குவரத்து தொடங்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே பெரியசெவலையில் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் அறுவடை செய்த கரும்புகளை மேற்கண்ட சர்க்கரை ஆலைக்கு தான் கொண்டு செல்வார்கள். ஏனெனில் அப்போது அங்கு ஒரு ஆலை மட்டுமே இருந்தது.
இதனால் சர்க்கரை ஆலைகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் திருக்கோவிலூர் நகருக்குள் வந்து தான் ஆலைக்கு செல்ல முடியும். இதுதவிர சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் வாகனங்களும் திருக்கோவிலூர் நகருக்குள் வந்து செல்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் என்பது அந்த பகுதியில் அதிகளவில் காணப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது மக்கள் தொகை பெருக்கத்தால் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் திருக்கோவிலூரில் போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாகி விட்டது. இந்த போக்குவரத்து நெரிசலில் தினமும் அப்பகுதி மக்கள் சிக்கி அவதியடைந்து வந்தனர்.
எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருக்கோவிலூர் அருகே உள்ள ஆவிகொளப்பாக்கம் கிராமத்தில் இருந்து திருக்கோவிலூர்-கள்ளக்குறிச்சி சாலையை இணைக்கும் வகையில் கீழத்தாழனூர் வரை புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கடலூர்-திருக்கோவிலூர் சாலையில் மடப்பட்டில் இருந்து ஆவிகொளப்பாக்கம் வரையுள்ள சாலையை மேம்படுத்தி, அங்கிருந்து கீழத்தாழனூர் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக புறவழிச்சாலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக தமிழக அரசு ரூ.99 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கியது. இதையடுத்து கடந்த ஆண்டு இந்த பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது மடப்பட்டு முதல் ஆவிகொளப்பாக்கம் வரை 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. ஆனைவாரி ரெயில்வே கேட் அருகே மட்டும் மேம்பாலம் கட்டும் பணி மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. ஆவிகொளப்பாக்கம் முதல் கீழத்தாழனூர் இடையே 5 கிலோ மீட்டர் புறவழிச்சாலை அமைக்கும் பணியும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், திருக்கோவிலூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மடப்பட்டில் இருந்து ஆவிகொளப்பாக்கம் வரை உள்ள சாலை மேம்படுத்தி ஆவிகொளப்பாக்கம்-கீழத்தாழனூர் இடையே புறவழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனைவாரி ரெயில்வே கேட் உள்ள பகுதியில் மத்திய அரசின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆவிகொளப்பாக்கத்தில் தொடங்கும் இந்த புறவழிச்சாலை 5 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். இதில் 8 சிறுபாலங்கள், 3 பாலங்கள், 1 இணைப்பு பாலம் கட்டப்பட்டு வருகிறது. புறவழிச்சாலையையொட்டியுள்ள கிராமப்பகுதியில் இணைப்பு சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது. புறவழிச்சாலை அமைக்கும் பணி 3 மாதத்திற்குள் முடிவடைந்து போக்குவரத்து தொடங்கும் என்றார்.