நீரின்றி அமையாது உலகு!

பூமியில் 4-ல் 3 பங்கிற்கு கடல்நீரை அள்ளிக் கொடுத்த இறைவன், நமக்கு தேவையான குடிநீரை மட்டும் அளந்து கொடுத்துள்ளான்.

Update: 2018-05-08 11:23 GMT
நீர்வளத்தை எந்தெந்த வழிமுறைகளில் எல்லாம் எடுக்க முடியுமோ அவ்வழிகளில் எடுத்துவிட்டு அது பற்றாது என்பது போல் மேலும், மேலும் தண்ணீரை தேடிக்கொண்டிருக்கிறது மனித இனம்.

கடவுளின் படைப்பில் அனைத்து உயிரினங்களும் சமம். இதை ஒத்துக்கொள்ளாத மனித இனம் தனக்கு மட்டுமே அனைத்து வளங்களும் என கூறி மற்ற உயிரினங்களிடம் இருந்து கூட நீர்வளத்தை பறித்து தனக்கே உபயோகப்படுத்தி வருகிறது. காசு கொடுத்தால் மனிதனுக்கு குடிநீர் கிடைத்துவிடும் என்றால் மற்ற உயிரினங்களின் கதி? தற்போது அதுவும் சுருங்கி நீர்வளம் உற்பத்தியாகும் பகுதிகளில் உள்ளவர்களுக்கே நீர் என மனதளவில் மனிதம் சுருங்கிவிட்டது எனலாம்.

இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கின்றன. முன்பு ஆறு மற்றும் குளங்கள், கிணறு போன்ற நீர் ஆதாரங்களுக்கு சென்று குளிக்கும் வழக்கத்துக்கு இப்போது மனிதன் முழுக்குப்போட்டுவிட்டான். நாகரிகம் என்ற பெயரில் வீட்டுக்கொரு குடிநீர் குழாயை அமைத்து அதில் வரும் நீரை அனாவசியமாக வீதியில்விட்டு வீணாக்க தொடங்கிவிட்டோம். முன்பெல்லாம் இதர தேவைக்காக தண்ணீர் எடுக்க ஊர் நடுவே பொதுக்கிணறுகள் இருந்தன. இன்றைக்கு அவற்றை தூர்ந்துபோகச்செய்துவிட்டு, வீட்டுக்கு வீடு ஆழ்துளை கிணறுகள் அமைத்து தேவைக்கும் அதிகமான தண்ணீரை உறிஞ்சி பயன்படுத்துகிறோம்.

இப்படி எத்தனை நாளுக்கு தண்ணீரை உறிஞ்ச முடியும். நிலத்தடி நீரும் தற்போது குறைந்துவிட்டது. நீரை உறிஞ்ச தெரிந்த மனிதனுக்கு, மழை காலங்களில் வரும் அதிகப்படியான நீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்த தெரியவில்லை. வறட்சிக்கும், குடிநீர் தட்டுப்பாட்டுக்கும் அரசை குறை கூறுவது சாமானியனின் பார்வையில் வேண்டுமானால் நியாயமாக தெரியலாம். இதையெல்லாம் கடந்து குடிநீர் தட்டுப்பாடு யாரால் உருவாகிறது? அதை தடுக்க ஒவ்வொரு தனிமனிதனும் என்ன செய்கிறோம்? என்பது தான் முக்கியம்.

இதில் எந்த அரசு, எந்த நபர் ஆட்சி செய்தாலும் தனிமனித ஒழுக்கத்துடன் ஒவ்வொருவரும் நீர்வளத்தை பாதுகாத்தால் மட்டுமே நாம் அடுத்த தலைமுறையினருக்கு படிப்பு மற்றும் செல்வத்தோடு ஜீவ நாடியான நீர் ஆதாரத்தையும் கொடுக்க முடியும். நீரின்றி அமையாது உலகு என்பதுதான் நிதர்சனம்.

-ருத்ரன் 

மேலும் செய்திகள்