கூட்டுறவு கடன் சங்க தேர்தல் ‘திடீர்’ ரத்து கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல்

வாணியம்பாடி அருகே வாக்குப்பதிவு நடந்த நிலையில் திடீரென கூட்டுறவு கடன் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனை கண்டித்து தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-05-08 00:34 GMT
வாணியம்பாடி,

வாணியம்பாடி அருகே ஆலங்காயம் செல்லும் சாலையில் உள்ள வெள்ளக்குட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்துக்கு மொத்தம் 4 ஆயிரத்து 800 உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு 11 நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக மே 7-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் போட்டியிட ஏராளமானோர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். கடந்த 27-ந் தேதி தேர்தல் அலுவலர் செந்தில்குமார் இந்த மனுக்களை பரிசீலனை செய்து 43 பேர் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் வாக்களித்த வண்ணம் இருந்தனர். அப்போது அறிவிப்பு பலகையில் 43 வேட்பாளர்களுடன் கூடுதலாக 2 வேட்பாளர் பெயருடன் 45 பேர் பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வேட்பாளர் பலராமன் என்பவர் 2 பேர் மனுவை முறைகேடாக ஏற்றுக்கொண்டுள்ளர்கள். இதனை ஏற்க முடியாது. எனவே தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கோரி மனுதாக்கல் செய்தார். உடன் இருந்தவர்களும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் அலுவலர் செந்தில்குமார் வெளியிட்ட அறிவிப்பு தகவல் பலகையில் ஒட்டப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த மேற்கு மாவட்ட தி.மு.க.இளைஞரணி துணை அமைப்பாளர் கிரிராஜ் தலைமையில் தி.மு.க.வினர் வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் கூட்டுறவு கடன் சங்கம் முன் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். “போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம். உங்கள் பிரச்சினை குறித்து கோர்ட்டை அணுகி தீர்த்துக்கொள்ளுங்கள்” என போலீசார் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதேபோல் வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரம் கூட்டுறவு கடன் சங்க தேர்தலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்