புதுச்சேரியில் நீட் தேர்வு மையத்துக்கு வந்து இருந்த போது மேலும் ஒரு மாணவியின் தந்தை சாவு

நீட் தேர்வு எழுத தேர்வு மையத்துக்கு வந்து இருந்த போது மேலும் ஒரு மாணவியின் தந்தை இறந்து போனார். புதுச்சேரியில் நடந்த இந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-05-07 23:45 GMT
புதுச்சேரி,

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தமிழகத்தைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும், புதுச்சேரியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் தேர்வு எழுதினார்கள்.

இவர்களில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. தேர்வு மையங்களுக்கு சென்றபோது கொலுசு, தோடு ஆகியவற்றை கழற்றியும், சடை பின்னலை அவிழ்த்து விட்டும், முழு கை சட்டை, ஜீன்ஸ் பேண்ட் அணிந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு என மாணவர்களிடம் கடும் கெடுபிடி காட்டப்பட்டது. இது மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் திருவாரூரைச் சேர்ந்த மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தம்மனம் பகுதியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்காக அவரை அவரது தந்தை கிருஷ்ணசாமி கேரளாவுக்கு அழைத்து வந்து இருந்தார். அங்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கிருஷ்ணசாமி இறந்து போனார். சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரியைச் சேர்ந்த மாணவி ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு மதுரை பசுமலையில் ஒதுக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்துக்கு அவரது தந்தை கண்ணன் அழைத்து வந்து இருந்தார். மகள் தேர்வு எழுதி விட்டு வந்த நிலையில் வெளியே காத்து இருந்த அவர் மாரடைப்பால் இறந்து போனார்.

இந்தநிலையில் புதுவைக்கு நீட் தேர்வு எழுதுவதற்காக வந்து இருந்த நிலையில் மேலும் ஒரு மாணவியின் தந்தை உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்து போன பரிதாப சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிபாளையத்தை சேர்ந்த மாணவி சுவாதி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்காக நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு புதுச்சேரியில் உள்ள வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

இங்கு தேர்வு எழுதுவதற்காக மாணவி சுவாதி தனது தந்தை சீனிவாசன் (வயது50), தாயார் அமுதாவுடன் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு வந்து இருந்தார். வழக்கமான சோதனைகள் முடிந்தபின் மாணவி சுவாதி தேர்வு நடந்த அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தேர்வு எழுதிக் கொண்டு இருந்த நிலையில் இவர்கள் அனைவரும் தேர்வு நடந்த கல்லூரி வளாகத்தில் காத்து இருந்தனர்.

தேர்வு தொடங்கி விட்ட நிலையில் தேர்வுமைய கெடுபிடி காரணமாக அங்கிருந்த மாணவர்களுடன் வந்தவர்கள் அனைவரும் கட்டாயப் படுத்தி வெளியேற்றப்பட்டனர். சீனிவாசன், அவரது மனைவி அமுதாவும் வெளியேற்றப்பட்டனர். இதன்பின் கல்லூரிக்கு வெளியே சாலையில் அவர்கள் காத்து இருந்துள்ளனர். அப்போது சீனிவாசனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதை அவர் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார்.

இந்தநிலையில் தேர்வு எழுதி விட்டு மாணவி சுவாதி வெளியே வந்தார். அவரிடம் தேர்வு எழுதியது குறித்து சீனிவாசன் விசாரித்துள்ளார். இதன்பின் தனக்கு உடல்நிலை சரி இல்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து அவரது மனைவி அமுதாவும், மகள் சுவாதியும் ஆட்டோவில் அவரை ஏற்றிக் கொண்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உள்ளனர்.

அங்கு உள் நோயாளியாக சேர்க்கப்பட்டு டாக்டர்கள் மருத்துவ சிகிச்சையை தொடங்கி உள்ளனர். இதனால் மாணவியும், அவரது தாயாரும் பண்ருட்டிக்கு திரும்பாமல் புதுவையிலேயே இருந்து சீனிவாசனை கவனித்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்து போனார்.

அவர் மாரடைப்பால் உயிரிழந்தாரா? என்பது குறித்து டாக்டர்கள் உறுதி செய்யவில்லை. அவர் மூளைக்காய்ச்சலால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. சீனிவாசன் இறந்து போனதையொட்டி அவரது மனைவி அமுதா, மகள் சுவாதி மற்றும் அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர். பெரியகடை போலீசார் அங்கு வந்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இறந்து போன சீனிவாசன் மேல்மருவத்தூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலைபார்த்து வந்துள்ளார். 

மேலும் செய்திகள்