நீட் தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்: மாணவர் சங்கம், போலீசார் இடையே தள்ளுமுள்ளு; 4 பேர் காயம்
சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அம்பத்தூர்,
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களில் மையம் அமைத்ததை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னை அண்ணாநகரில் உள்ள சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று அப்பகுதியில் திரண்டனர்.
அந்த மாணவர்கள் மண்டல அலுவலகம் அமைந்துள்ள தெருவிற்குள் நுழைந்துவிடாமல் திருமங்கலம் போலீஸ் உதவி ஆணையர் கமில்பாட்ஷா தலைமையில் போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்தனர். மாணவர்கள் மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கும்படி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தள்ளுமுள்ளு-காயம்
சுமார் அரை மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போலீசார் அனுமதி கொடுக்காததால் இரும்பு தடுப்புகளை தள்ளிவிட்டு முன்னேறி செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் இந்த அமைப்பை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி சுரேகாவுக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதேபோன்று மற்றொரு மாணவி ஹேமா, மாணவர்கள் சுபாஷ், சுபைப் ஆகியோருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
30 பேர் கைது
சுமார் ஒரு மணி நேரம் இந்த தள்ளுமுள்ளு நீடித்ததால் அந்த அமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் நிருபன் உள்ளிட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து நிருபன் கூறும்போது, “தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். 2 வருடமும் நீட் தேர்வில் பெரும் குளறுபடி ஏற்பட்டது. இதனால் அனிதாவில் தொடங்கி 5 பேரை உயிர்பலி வாங்கியுள்ளது. வேண்டுமென்றே தமிழக மாணவர்களை பிற மாநிலங்களுக்கு அனுப்பி மத்திய, மாநில அரசுகள் பழிவாங்கியுள்ளது” என்றார்.
இந்த போராட்டம் காரணமாக அப்பகுதி 2 மணி நேரம் பரபரப்பாக இருந்தது. தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.