80 ஆண்டுகள் பழமையான கோவிலை இடிக்கப்போவதாக வந்த தகவலால் பக்தர்கள் போராட்டம்

கொளத்தூரில் 80 ஆண்டுகள் பழமையான கோவிலை இடிக்கப்போவதாக வந்த தகவலால் பக்தர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-05-07 23:00 GMT
செங்குன்றம்,

சென்னை கொளத்தூர் ரெட்டேரி ஜங்ஷன் கொளத்தூர் செல்லும் சாலையில் 80 ஆண்டுகள் பழமையான மேல்மலையனூர் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுமார் 15 அடி உயரத்திற்கு கோபுரம் உள்ளது. கொளத்தூர், லட்சுமிபுரம், ரெட்டேரி, கல்பாளையம், விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பக்தர்கள் இந்த கோவிலில் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

கோவிலை புதுப்பித்து பெரிய கோவிலாக கட்டி கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து தற்போது திருப்பணி வேலைகள் நடந்து வருகின்றன. திருப்பணி முடிவடைந்ததும் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

பக்தர்கள் போராட்டம்

இந்தநிலையில் நேற்று காலை சென்னை மாநகராட்சி 6-வது மண்டலம் 64-வது வட்ட அதிகாரிகள் இந்த கோவிலை இடிக்கப்போவதாக பக்தர்களிடையே தகவல் பரவியது. இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக கொளத்தூர் ரெட்டேரி ஜங்ஷனில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ ரவிராஜ், பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர்கள் எம்.வி.சசிதரன், சென்னை சிவா உள்ளிட்டோர் வார்டு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘கோவிலை இடிக்க வரவில்லை. ஆய்வு செய்ய தான் வந்தோம்’ என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் தான் கோவிலை இடிக்கப்போவதாக பொய்யான தகவலை யாரோ சிலர் பரப்பி விட்டது தெரியவந்தது. இதன்பிறகே சுமார் 3 மணி நேரமாக கோவில்முன்பு திரண்டிருந்த பக்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்