சென்னையில் வட மாநில குழந்தை கடத்தல் கும்பல் கைது

சென்னையில் வட மாநில குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-05-07 22:15 GMT
சென்னை,

குழந்தை இல்லாத முக்கிய பிரமுகர்களுக்கு தத்து கொடுப்பது போல் கடத்தல் குழந்தைகளை ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

போலீஸ் அதிகாரி மருமகள்

சென்னை சேத்துப்பட்டை சேர்ந்தவர் சோமன். ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான இவரது மகன் யோகேஷ் குமாருக்கும், பத்மினி என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பத்மினி தான் கர்ப்பமானதாகவும், பெண் குழந்தையை பெற்றது போலவும் நாடகம் ஆடி, ஒரு பெண் குழந்தையோடு கணவன் வீட்டிற்கு வந்தார்.

போலீஸ் அதிகாரி சோமனுக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டது. மருமகள் பத்மினி கர்ப்பமானது போல ஆஸ்பத்திரியில் அடிக்கடி சிகிச்சை பெற்று வந்தார். குறிப்பிட்ட ஆஸ்பத்திரியில் சோமன் விசாரித்த போது அதிர்ச்சி தகவல் கிடைத்தது. பத்மினி கர்ப்பமாகவில்லை என்பது தெரியவந்தது. இதனால் சோமனின் மகன் யோகேஸ் குமார் தனது மனைவி பத்மினி மீது எழும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

அந்த புகார் மனு மீது எழும்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் தான் அந்த குழந்தையை பெறவில்லை என்றும், வட மாநிலத்தை சேர்ந்த தம்பதி ஒருவரிடம் பெண் குழந்தையை தத்தெடுத்ததாகவும் பத்மினி தெரிவித்தார். தன்மீது வழக்குபதிவு செய்யப்பட்டதால், அதில் கைதாகாமல் இருக்க பத்மினி கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். பின்னர் இந்த வழக்கு கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. துணை கமிஷனர் மல்லிகா, கூடுதல் துணை கமிஷனர் சியாமளா தேவி ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் விசாரணை நடத்தினார்.

கடத்தல் கும்பல்

விசாரணையில் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த குழந்தை கடத்தல் கும்பலிடம் இருந்து குற்றம் சுமத்தப்பட்ட பத்மினி குழந்தையை விலைக்கு வாங்கியிருப்பது கண்டறியப்பட்டது. குழந்தையை விற்ற உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேரை பத்மினி மூலம் போலீசார் சென்னைக்கு வரவழைத்தனர்.

அவர்களிடம் விசாரித்தபோது, அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது. குழந்தைகளை தத்து கொடுப்பது போல போலியான ஆவணங்களை தயாரித்து ஏராளமான குழந்தைகளை கடத்தி, குழந்தை இல்லாத முக்கிய பிரமுகர்களுக்கு ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்துள்ளனர். பத்மினிக்கும் அதுபோல குழந்தையை கடத்தி விற்பனை செய்தது அம்பலமானது.

கைது

இதன்பேரில் கடத்தல் கும்பலை சேர்ந்த ரிக்கி வர்மா (வயது 40), அவரது மனைவி கோமல் வர்மா (35), அஜய்சர்மா (40), அவரது மனைவி ஜெயா சர்மா (35) ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

பீகார் மாநிலத்தில் இருந்து 200 பேர் அடங்கிய குழந்தை கடத்தல் கும்பல் சென்னையில் நடமாடுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த கும்பலோடு, தற்போது கைது செய்யப்பட்டுள்ள கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

தரகர் தொடர்பு

தற்போது கைது செய்யப்பட்டுள்ள குழந்தை கடத்தல் தம்பதிகள் தாங்கள் கடத்தும் குழந்தைகளை தாங்கள் பெற்ற குழந்தைகள் என்று சொல்லியே நிறைய பேருக்கு விற்பனை செய்துள்ளனர். இவர்களுக்கு துணையாக சென்னையை சேர்ந்த தரகர் ஒருவரும் செயல்பட்டு உள்ளார். அவரும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்