வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் திருநங்கைகள் மனு

வீட்டுமனை பட்டா கேட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் திருநங்கைகள் மனு கொடுத்தனர்.

Update: 2018-05-07 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பல்வேறு மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திருநங்கை அசினா தலைமையில், ஏராளாமான திருநங்கைகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கீரனூர், அறந்தாங்கி பகுதியில் நாங்கள் வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பம் அளித்தோம். ஆனால் மனுவின் மீதான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால் எங்களுக்கு உரிய முறையில் பட்டா கிடைக்கவில்லை. குறிப்பாக நாங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறோம். திருமயம் தாலுகா நெய்வாசல் பட்டி பகுதியில் நத்தம் புறம்போக்கு இடம் உள்ளது. இந்த இடத்திலாவது எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. உள்ளாட்சி தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், மாவட்டத்தில் கிராம, நகர, பேரூராட்சிகளில் துப்புரவு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ரூ.223 கொடுக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது உயர்ந்து வரும் விலைவாசி உயர்வு காரணமாக குடும்பம் நடத்துவதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றோம். இதனால் தகுந்த நடவடிக்கை எடுத்து கூலியை ரூ.300 ஆக உயர்த்த வேண்டும். என அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் கணேஷ் நடவடிக்கை எடுப்பதாக உறுளித்தார். 

மேலும் செய்திகள்