இரும்பு கம்பியால் வாலிபர் மீது தாக்குதல் 5 பேர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே இரும்பு கம்பியால் வாலிபரை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-07 22:45 GMT
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேட்டில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்துபவர் (ஹஜரத்) அப்துல் ஜப்பர். இவர் தொழுகை நடத்துவதில் முரண்பாடு உள்ளதாக கூறி இனிமேல் தொழுகை நடத்த கூடாது என ஒரு தரப்பினர் தெரிவித்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அப்துல் ஜப்பர் தான் தொழுகை நடத்த வேண்டும் என கூறி வந்தனர். இதனால் இருதரப்பினர் இடையே பிரச்சினை இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று தொழுகையின் போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் எஸ்.டி.பி.ஜ. கட்சியின் மாவட்ட பொதுசெயலாளர் ஷேக்தாவூ காயம் அடைந்தார். அவர் திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து இருதரப்பினர் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் இரு தரப்பை சேர்ந்த அப்துல் ஜப்பர், கட்டிமேட்டை சேர்ந்த சதுர்தீன் உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு அப்துல் ஜப்பர் தரப்பை சேர்ந்த கட்டிமேடு எல்லை நாகலாடியில் வசிக்கும் சதுர்தீன்(35) என்பவரை இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் மற்றொரு தரப்பினர் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த சதுர்தீன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு இனிக்கோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாரீக்(22), ஹேக்முகமது(32), ஜபூர்லாஹான்(48), அப்துல்பாரி(52), முகமதுசெல்வம் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்