கோவில் திருவிழாவில் தந்தை- மகன் கொலை போலீஸ் தேடிய வாலிபர் கைது

கும்பகோணம் அருகே கோவில் திருவிழாவில் தந்தை- மகன் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2018-05-07 22:15 GMT
கும்பகோணம்,

கும்பகோணம் வட்டிபிள்ளையார் கோவில் கல்லுகடைசந்து பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது47). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேலுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள காளிகாபரமேஸ்வரி கோவிலில் திருவிழா நடைபெற்றபோது முருகனுக்கும், சக்திவேலுக்கும் முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் மறுநாள் கூலிப்படையினர் மூலம் முருகன், அவரது தம்பி ரஞ்சித்குமார் (35), முருகனின் மகன் அர்ஜூன் (27) ஆகியோரை அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முருகனும், அர்ஜூனும் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கைது

இதில் அர்ஜூன் செல்லும் வழியில் இறந்தார். முருகன் தஞ்சை மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கும்பகோணம் தாலூகா போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், ராஜவேல், வைரவேல், வளர்ச்செல்வன் ஆகிய 4 பேர் திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் இந்த கொலை தொடர்பாக போலீஸ் தேடி வந்த அதே பகுதியை சேர்ந்த ஜெயசங்கர் மகன் சக்திவேலை(25) போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அருண் மற்றும் விஷ்வா ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்