பாலிடெக்னிக் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்

பாலிடெக்னிக் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

Update: 2018-05-07 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பழவிளை பாலிடெக்னிக் கல்லூரி, களியங்காடு பகுதியில் உள்ள கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தலா 150 ஆசிரியர்கள் வீதம் 450-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் நியமிக்கப்பட்டு இருந்தனர். விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முதல் தொடங்குவதாக இருந்தது. இந்த பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளாக விடைத்தாள் ஒன்று திருத்த ரூ.7 மட்டுமே வழங்கப்படுவதாகவும், தினப்படியாக ரூ.190 மற்றும் ரூ.115 மட்டுமே வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனை மாற்றி அமைத்து ஒரு விடைத்தாளுக்கு ரூ.15 வீதம் வழங்க வேண்டும் எனவும், தினப்படியாக ரூ.400 மற்றும் ரூ.300 வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர். ஆனால் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து நேற்று விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க இருந்த நிலையில் நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்பு ஆசிரியர்கள் தங்களது பணியை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் கல்லூரி முதல்வர் ராஜா ஆறுமுக நயினார் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், உங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுங்கள் நான் அதை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்கிறேன் என்றார். அதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்குப்பிறகு ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டதாக அரசு பாலிடெக்னிக் முதல்வர் ராஜா ஆறுமுக நயினார் கூறினார். வழக்கமாக முதல் நாள் அன்று காலை 11 மணிக்கு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும். மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். ஆனால் முதல்நாளான நேற்று இந்த போராட்டத்தின் காரணமாக 3½ மணி நேரம் தாமதமாக விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.

இதேபோல் மற்ற 2 மையங்களிலும் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்