கலப்பட நெய் தயாரித்த 2 தொழிற்சாலைகளுக்கு ‘சீல்’ வைப்பு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கலப்பட நெய் தயாரித்த 2 தொழிற்சாலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.;

Update: 2018-05-07 21:30 GMT
ஆலந்தூர், 

சென்னையை அடுத்த மேடவாக்கம், ஜல்லடியன்பேட்டை, மாடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் கலப்பட நெய் விற்பனை செய்யப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், 50-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்தனர்.

அப்போது பல கடைகளில் கலப்பட நெய் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்தனர். பின்னர் கடைகளில் இருந்து 75 கிலோ கலப்பட நெய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜல்லடியன்பேட்டை பாலவிநாயகர் கோவில் தெருவில் உள்ள 2 வீடுகளில் தொழிற்சாலைகள் அமைத்து கலப்பட நெய்கள் தயாரிப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பறிமுதல்

இதையடுத்து அங்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், 78 கிலோ நெய், 49 கிலோ வெண்ணெய் மற்றும் கலப்படம் செய்ய வைத்திருந்த எண்ணெய் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து வீடுகளில் இயங்கி வந்த 2 நெய் தொழிற்சாலைகளுக்கும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். கலப்பட நெய்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்