தாம்பரம் அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது டிரைவர் உள்பட 4 பேர் உயிர்தப்பினர்

தாம்பரம் அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் டிரைவர் உள்பட 4 பேர் உயிர்தப்பினர்.

Update: 2018-05-07 22:30 GMT
படப்பை,

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் குகன். இவர் தனக்கு சொந்தமான காரை சென்னையில் உள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் வாடகைக்கு விட்டுள்ளார். இந்த காரை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 27) என்பவர் ஓட்டி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மதியம் தாம்பரத்தை அடுத்த கிஷ்கிந்தா சுற்றுலா பூங்காவில் இருந்து ஒரு குழந்தை உள்பட 3 பேரை காரில் ஏற்றிக்கொண்டு வண்டலூர் பூங்கா நோக்கி செந்தில்குமார் சென்றுகொண்டு இருந்தார்.

வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தாம்பரம் அருகே உள்ள எருமையூர் அருகே வந்தபோது, நடுரோட்டில் திடீரென காரில் இருந்த ‘ஹாரன்’ தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த டிரைவர், உடனே காரை நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கியபோது காரில் இருந்து திடீரென புகை வெளியேறியது.

கார் தீப்பிடித்து எரிந்தது

பதற்றம் அடைந்த டிரைவர், காரில் இருந்தவர்களை உடனடியாக கீழே இறக்கி விட்டார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதுகுறித்து சோமங்கலம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காரில் புகை வந்ததும் உடனே கீழே இறங்கியதால் டிரைவர் உள்பட 4 பேரும் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்