காயல்பட்டினம் கொத்தனாரை கொலை செய்தது ஏன்?

காயல்பட்டினம் கொத்தனாரை படுகொலை செய்தது ஏன்? என ரியல் எஸ்டேட் உரிமையாளர் போலீசாரிடம் பரபரப்பு தகவல் அளித்து உள்ளார்.

Update: 2018-05-07 22:45 GMT
ஆறுமுகநேரி,

காயல்பட்டினம் பூந்தோட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (வயது 28). கொத்தனாரான இவரை கடந்த மாதம் 23-ந்தேதி ஆறுமுகநேரி பேயன்விளையில் 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக ஆறுமுகநேரி பேயன்விளை புதூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரான சிவகுமார் (40), கந்தசாமி மகன் கார் டிரைவர் சந்திரசேகரன் (33), மேல ஆழ்வார்தோப்பைச் சேர்ந்த செல்லத்துரை மகன் பெரியசாமி (31) ஆகிய 3 பேர் மதுரை வாடிப்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் 3 பேரையும் ஆறுமுகநேரி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது சிவகுமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது.

ஆறுமுகநேரி பேயன்விளையைச் சேர்ந்த சுப்பையாவுக்கு 2 மனைவிகள் உள்ளனர். மூத்த மனைவியின் மூலம் 3 மகன்கள், 2 மகள்களும், 2-வது மனைவியின் மூலம் 2 மகன்களும் உள்ளனர். மூத்த மனைவியின் 3-வது மகன் ஜெயசங்கர். 2-வது மனைவியின் மூத்த மகன் விஜயன். இவர் எனது மைத்துனர் ஆவார்.

இந்த நிலையில் ஜெயசங்கர் தனது தோட்டத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, லாரிகள் மூலம் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்தார். இதனால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இதுகுறித்து நான் மற்றும் அப்பகுதி மக்கள் ஜெயசங்கரிடம் முறையிட்டோம். அப்போது ஜெயசங்கர் எனக்கு கொலைமிரட்டல் விடுத்தார்.

பின்னர் எனது மைத்துனர் விஜயனுக்கு கிடைக்க வேண்டிய சொத்துகளை அவருக்கு தராமல் பிறருக்கு விற்பனை செய்வதற்கு ஜெயசங்கர் ஏற்பாடு செய்தார். இதுகுறித்து நான் ஜெயசங்கரிடம் கேட்டபோது, அவருடைய கூட்டாளியான மணிகண்டன் உள்ளிட்டவர்கள் எனது வீட்டுக்கு வந்து மிரட்டினர். எனவே நாங்கள் மணிகண்டனை கொலை செய்தோம்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

பின்னர் சிவகுமார் உள்ளிட்ட 3 பேரையும் திருச்செந்தூர் கோர்ட்டில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான சிவகுமாரின் தம்பி விக்னேசுவரன், மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த நிக்சன் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்