கூட்டுறவு வங்கி தேர்தலை ரத்து செய்யக் கோரி ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த கிராமத்தினர்

காரியாபட்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தலை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Update: 2018-05-07 22:15 GMT
காரியாபட்டி,

காரியாபட்டி அருகே உள்ள சத்திரம் புளியங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தலை ரத்து செய்யக்கோரி அல்லாளப்பேரி, வல்லப்பன் பட்டி கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அருப்புக்கோட்டை கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளரிடம் முறையிட்டனர். கிராமத்தில் உண்ணாவிரதமும் இருந்தனர். இந்த நிலையில் நேற்று, தங்களது ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையுடன் காரியாபட்டி தாலுகா அலுவலகம் வந்து கோஷங்கள் எழுப்பி தாசில்தார் முத்து கிருஷ்ணனிடம் அவற்றை ஒப்படைக்க முயன்றனர். தாசில்தார் வாங்க மறுத்து கோரிக்கையை மனுவாக கொடுங்கள் கலெக்டருக்கு பரிந்துரை செய்கிறேன் என்று கூறிவிட்டார். மேலும்் கூட்டுறவு தேர்தலை ரத்து செய்யவில்லை என்றால் அருப்புக்கோட்டை கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்