காற்றாலைகள் அமைப்பதை தடுக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் வலியுறுத்தல்

தூத்துக்குடி அருகே, வடக்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்து பகுதியில் தனியார் காற்றாலைகள் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2018-05-07 23:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி வீரப்பன் தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது தூத்துக்குடி தட்டப்பாறை அருகே உள்ள வடக்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் உள்ளிட்ட பலர் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில், ‘வடக்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட முத்துசாமிபுரம், மடத்துப்பட்டி ஊர்களில் தனியார் நிறுவனம் சார்பில் காற்றாலைகளை அமைக்க கூடாது என கிராம மக்கள் போராடி வருகின்றனர். இதில் காற்றாலைக்கு எதிராக போராடி வரும் இளைஞர்கள், பெண்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு உள்ளன. அதனை திரும்ப பெற வேண்டும். இளைஞர்களை தாக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காற்றாலைகள் அமைப்பதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அணியாபரநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், ‘எங்கள் பகுதியில் சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை.

புதுப்பட்டி மேட்டுப்பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு தேசிய ஊரக குடிநீர் திட்டம், தமிழ்நாடு குடிநீர் வாரியம் மூலமாக தண்ணீர் வழங்க நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் அந்த தொட்டியில் இதுவரை குடிநீர் ஏற்றப்பட்டு மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

கோவில்பட்டி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ’கோவில்பட்டி நகர் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக உருவாக்கப்பட்ட 2-வது குடிநீர் குழாய் திட்டம் முழுமையாக முடிவடையவில்லை.

மேலும் குடிநீர் இணைப்புக்கான டெபாசிட் தொகை, குடிநீர் கட்டண தொகை கடுமையாக உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 26-ந்தேதி நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவின் படி 2-வது குடிநீர் குழாய் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக கோவில்பட்டி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என தெரிவித்து கொள்கிறோம்’ என்று கூறி இருந்தனர்.

கிருஷ்ணம்மாள் தனது மகள்களுடன் மனு கொடுக்க வந்த போது எடுத்தபடம்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கடம்பூர் ரோட்டு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். இவர் தனது 2 மகள்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில், எனது கணவர் இறந்து விட்ட நிலையில், ‘நான் டீ கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனது ஒரே மகன் காந்திராஜன் (வயது 27). எனக்கு உதவியாக இருந்து வந்தான். இந்த நிலையில் என் கடையில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு கிரஷர் தொழிற்சாலை உள்ளது. கடந்த 21.3.18 அன்று அந்த தொழிற்சாலையில் உள்ளவர்களுக்கு டீ கொடுக்க எனது மகன் சென்றான். அப்போது அந்த தொழிற்சாலையில் தரையில் புதைக்கப்பட்டு இருந்த மின்கம்பியை மிதித்ததால் அவன் உயிர் இழந்தான். தொழிற்சாலையின் கவன குறைவால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. எனவே எனது மகன் சாவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அந்த தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

கோவில்பட்டி படர்ந்தபுளியை சேர்ந்த நாகராஜ் -தனலட்சுமி தம்பதியர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ‘கார் டிரைவராக பணியாற்றி வரும் எங்களின் மகன் கருப்பசாமி (வயது 27) கடந்த 24.4.18 அன்று வேலைக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றான். ஆனால் அவன் திரும்பி வரவில்லை. இதனால் நாங்கள் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். அவர்கள் புகார் மனுவை வாங்க மறுத்துவிட்டனர். மேலும் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார், உங்கள் மகன் ஒரு பெண்ணை கூட்டிக் கொண்டு சென்றுவிட்டதாகவும், உடனடியாக அவனை போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினர். தொடர்ந்து இது தொடர்பாக எங்களை அந்த போலீசார் தினமும் மிரட்டி வருகிறார்கள். மேலும் எங்கள் வீட்டுக்கு அந்த போலீசார் வந்து எனது மகனுடைய முக்கிய ஆவணங்களை எடுத்து சென்று விட்டனர். எனவே மாவட்ட நிர்வாகம் அந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் மகனை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்