விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய கோரி விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-05-07 22:15 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் அண்ணாநகர் கிழக்கு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அதே பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் இப்பகுதி மக்கள் அருகில் உள்ள விளை நிலங்களுக்கும், திரு.வி.க. நகர், வீரபாண்டியன் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று குடிநீர் பிடித்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். இருப்பினும் குடிநீர் வினியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் நகர செயலாளர் சேகர் தலைமையில் விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள், தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை தடைசெய்ய வேண்டும், தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி அறிந்து வந்த நகராட்சி பொறியாளர் பாண்டு, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள், விருத்தாசலம் அண்ணா நகர் வடக்கு பகுதி மற்றும் கிழக்கு பகுதியில் கடந்த 2 மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மெயின் குடிநீர் குழாயில் இருந்து மின் மோட்டார்கள் பொருத்தி தண்ணீர் எடுப்பதால், பிற வீடுகளுக்கு குடிநீர் செல்லவில்லை.

மேலும் புதிய வீடு கட்டுபவர்கள் மின்மோட்டாரை வைத்து தண்ணீரை உறிஞ்சுவிடுவதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவரும், முறையாக குடிநீர் திறந்து விடுவதில்லை. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறினர். அதற்கு நகராட்சி பொறியாளர் பாண்டு, குடிநீர் வழங்க 2 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து அண்ணா நகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இடங்களை நகராட்சி பொறியாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்