கள்ளக்குறிச்சியில் ஆசிரியை வீட்டில் ரூ.7 லட்சம் நகை-பணம் கொள்ளை

கள்ளக்குறிச்சியில் ஆசிரியை வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-05-07 21:45 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி விநாயகா நகரை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 47). இவர் கச்சிராயப்பாளையத்தில் உள்ள கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அலுவலராக உள்ளார். இவரது மனைவி கவுசல்யா(40). இவர் தியாகதுருகத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாஸ்கர், தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வேலூரில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். நேற்று காலை இவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து செல்போன் மூலம் பாஸ்கருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அவர் பதறியடித்துக்கொண்டு, வீட்டுக்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த 7½ பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் பூஜை அறையில் வைத்திருந்த 15 கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பாஸ்கர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து, தடயங்களை சேகரித்து சென்றனர். கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஆசிரியை வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்