கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்

கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Update: 2018-05-07 22:45 GMT
நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேலப்பாளையம் நகர தலைவர் முகைதீன் அப்துல் காதர் தலைமையில் ஏராளமானவர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், மேலப்பாளையம் மண்டலம் 31 முதல் 37-வது வார்டு வரை பகுதிகளுக்கு உள்பட்ட ரேஷன்கடை 4 கிலோ மீட்டார் தூரத்தில் உள்ளது. அங்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்க சிரமமாக இருக்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி வார்டு பகுதியில் புதிய ரேஷன் கடை திறக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

புரட்சிகர இளைஞர் கழக நெல்லை மாவட்ட அமைப்பாளர் சுந்தர்ராஜ் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், ‘நீட்’ தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். கட்டுப்பாடு என்ற பெயரில் மாணவர்களை அவமானப்படுத்துகிறார்கள். ‘நீட்’ தேர்வால் திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி பரிதாபமாக இறந்தார். அவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு மருத்துவ கல்வி செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும். கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

அ.தி.மு.க. வக்கீல் ஜெனி தலைமையில் நிர்வாகிகள் ராஜபாண்டியன், நல்லபெருமாள் உள்ளிட்டோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “பாளையங்கோட்டை கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் அ.தி.மு.க. சார்பில் 11 பேர் மனு தாக்கல் செய்தனர். அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. எந்தவிதமான விசாரணையும் நடத்தாமல் மனுக்களை தள்ளுபடி செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

சிவந்திப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மனைவி இசக்கிதாய். இவர், தனது 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், “எனது கணவர் மாரியப்பன் மீது களக்காடு போலீசார் வேண்டும் என்றே பொய் வழக்குப்பதிவு செய்கிறார்கள். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு மருத்துவ சமுதாய மறுமலர்ச்சி பேரவை தலைவர் காளியப்பன் தலைமையில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் சங்கத்தை சேர்ந்தவர் முடிதிருத்தும் கடை வைத்து நடத்தி வருகிறார்கள். இந்த தொழில் மூலம் குறைந்த அளவு வருமானம் கிடைக்கிறது. எங்கள் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தவே சிரமமாக உள்ளது. எனவே எங்களுக்கு அரசின் இலவச மனைபட்டா வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

மருதம் நலச் சங்க தலைவர் சந்திரசேகரன் தலைமையில் கலெக்டரிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த பகுதியில் ஒரு ரவுண்டானா அமைக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்