கார், மரத்தில் மோதி கல்லூரி நிர்வாகி பலி மற்றொரு விபத்தில் டிரைவர் சாவு

ராஜாக்கமங்கலம் அருகே கார், மரத்தில் மோதி கல்லூரி நிர்வாகி பரிதாபமாக இறந்தார். இதுபோல், மற்றொரு விபத்தில் தனியார் கல்லூரி பஸ் டிரைவர் பலியானார்.

Update: 2018-05-06 22:30 GMT
ராஜாக்கமங்கலம்,

இரணியலை சேர்ந்தவர் நாகராஜ பெருமாள் (வயது59). இவர் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். மேலும், லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளராக இருந்து வந்தார். இவரது ஒரு மகள் கேசவன்புத்தன்துறையில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார். அவரை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக நாகராஜ பெருமாள் தனது மற்றொரு மகள் வைஷ்ணவியுடன் காரில் புறப்பட்டு சென்றார்.

கார் ராஜாக்கமங்கலம்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற தென்னை மரத்தில் மோதியது.

பரிதாப சாவு

இதில் காரில் இருந்த நாகராஜ பெருமாளும், வைஷ்ணவியும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் நாகராஜ பெருமாள் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த வைஷ்ணவி, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்றொரு சம்பவம்

ராஜாக்கமங்கலம் அருகே பிள்ளையார்விளையை சேர்ந்தவர் சிவசெண்பக அரசன் (29). இவர் ஒரு தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் சிவசெண்பக அரசன், தனது மனைவி சிவரஞ்சனியுடன் பிள்ளையார்விளையில் இருந்து நாகர்கோவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

பருத்திவிளை சந்திப்பில் வந்த போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அருகில் நின்றவர்கள் அவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், சிவசெண்பக அரசன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த சிவரஞ்சனி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்துகள் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்