மாவட்டத்தில் 7 மையங்களில் ‘நீட்’ தேர்வு 5,398 பேர் எழுதினர்

நாமக்கல் மாவட்டத்தில் 7 மையங்களில் நடந்த ‘நீட்‘ தேர்வை 5 ஆயிரத்து 398 பேர் பங்கேற்று எழுதினர். 162 பேர் எழுதவில்லை.

Update: 2018-05-06 22:45 GMT
நாமக்கல்,

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைகான ‘நீட்‘ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நாமக்கல் மாவட்டத்தில் 7 மையங்களில் நேற்று நடந்தது. நேஷனல் பப்ளிக் பள்ளி, டிரினிடி இன்டர்நேஷனல் பள்ளி, பாரதி அகாடமி பள்ளி, ஸ்பெக்ட்ரம் அகாடமி பள்ளி, லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளி, நவோதயா அகாடமி பள்ளி மற்றும் செல்வம் தொழில்நுட்ப கல்லூரி உள்ளிட்ட மையங்களில் நடந்த ‘நீட்‘ தேர்வில் மொத்தம் 5 ஆயிரத்து 398 பேர் பங்கேற்று எழுதினர்.

முன்னதாக ‘நீட்‘ தேர்வில் பங்கேற்க நாமக்கல் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 560 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதில் 162 பேர் தேர்வுக்கு வரவில்லை. தேர்வு எழுத வந்த மாணவர்களை சோதனையிடுவதற்கு வசதியாக இரண்டு கட்டங்களாக தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து தீவிர சோதனைக்கு பிறகு தேர்வுக்கூடத்திற்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வர்களுக்கு கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் கட்டுப்பாடுகள் அதிக அளவில் விதிக்கப்பட்டு இருந்தன. கைக்கெடிகாரம், ஷூ அணியவும், செல்போன், கால்குலேட்டர், காகிதங்கள், பேனா உள்ளிட்ட பொருள்களை எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் மாணவர்கள் முழுக்கை சட்டை அணியவும், மாணவிகள் துப்பட்டா அணியவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் மாணவிகள் கொலுசு, கம்மல், செயின் உள்ளிட்ட அணிகலன்களை அணியவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் மாணவிகள் தாங்கள் அணிந்து வந்திருந்த அணிகலன்களை அவசர, அவசரமாக கழற்றி பெற்றோரிடம் கொடுத்து சென்றனர்.

இதற்கிடையே கூந்தலை வாராமல் (ப்ரீ ஹேர்) வந்த மாணவிகள் ஜடை பின்னிவிட்டு, அவர்கள் அணிந்திருந்த ‘கிளிப்பை’ அகற்றிய பின்னரே தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதே போல் நாமக்கல் ஸ்பெக்ட்ரம் அகாடமி தேர்வு மையத்துக்கு முழுக்கை சட்டையுடன் வந்த மாணவர் ஒருவர் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் அந்த சட்டையை கழற்றி அரை கை அளவுக்கு வெட்டி, அதனை அணிந்த பிறகே தேர்வு எழுத செல்ல அனுமதிக்கப்பட்டார்.

தேர்வு எளிதாக இருந்ததாகவும், இயற்பியல் பாடம் சற்று கடினமாக இருந்ததாகவும் தேர்வு எழுதிய சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தெரிவித்தனர். அதே போல் மாநில பாடத்திட்ட மாணவர்கள் தேர்வு கடினமாக இருந்ததாக கூறினர். மேலும் 100 முதல் 150 வினாக்கள் வரை பதில் அளித்ததாகவும், ஆனால் அந்த பதில்கள் சரியான பதில் தானா என்பதை உறுதிசெய்ய முடியவில்லை எனவும் அவர்கள் கூறினர்.

வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் நேற்று நாமக்கல்லில் நடந்த ‘நீட்‘ தேர்வில் பங்கேற்க நேற்று முன்தினம் முதலே பெற்றோருடன் வந்து நாமக்கல்லில் தனியார் ஓட்டல் மற்றும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி தேர்வில் பங்கேற்றதை காண முடிந்தது.

அதே போல் காலை 9.30 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்கு வருபவர்கள், தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால் காலை 6 மணி முதலே சம்பந்தப்பட்ட மையங்களுக்கு முன்பு மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து காத்திருந்தனர். மாணவர்களுடன் பாதுகாப்புக்காக வந்திருந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அந்தந்த தேர்வு மையங்கள் அருகே தேர்வு முடியும் வரை வெயிலில் காத்திருந்தனர். 

மேலும் செய்திகள்