தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய போட்டித்தேர்வை தஞ்சை மாவட்டத்தில் 4,292 பேர் எழுதினர்

தஞ்சையில் 19 மையங் களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய போட்டித்தேர்வு நேற்று நடந்தது. இதில் 4 ஆயிரத்து 292 பேர் தேர்வு எழுதினர். 3 ஆயிரத்து 137 பேர் எழுதவரவில்லை.

Update: 2018-05-06 22:45 GMT
தஞ்சாவூர்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஆய்வக உதவியாளர்் பணிகளுக்கான போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் 19 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மற்றும் சரபோஜி கல்லூரியில் நடந்த தேர்வினை தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் கலெக்டர் அண்ணாதுரை கூறுகையில், “தேர்வு கண்காணிப்பில் ஈடுபடும் அலுவலர்கள் கவனமாக பணியாற்றவும், 100 சதவீதம் தவறுகள் நடைபெறாமல் கண்காணிக்கவும், தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த தேர்வை எழுத தஞ்சையில் 19 மையங்களில் 7 ஆயிரத்து 429 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 4 ஆயிரத்து 292 பேர் தான் தேர்வு எழுதினர். இது 57.8 சதவீதம் ஆகும். 3 ஆயிரத்து 137 பேர் தேர்வு எழுத வரவில்லை.

குடிநீர்வசதி

தேர்வு தொடங்கிய அரை மணி நேரத்திற்கு பின்னர் அதாவது 10.30 மணிக்கு பின்னர் தேர்வர்கள் யாரும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வர்கள் எவரும் செல்போன், கால்குலேட்டர், டேபிளேட் மற்றும் அதிநவீன மின்னணு சாதனங்கள் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தேர்வு நடைபெறும் மையத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின் வசதி, செய்யப்பட்டிருந்தது”என்றார்.

அப்போது தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் தங்கபிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்