மக்கள் விரும்பாத திட்டங்களை நிறைவேற்றினால் தொடர்ந்து போராட்டம்: நியூரிட்னோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேச்சு

மக்கள் விரும்பாத திட்டங்களை நிறைவேற்றினால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று டி.ராமகிருஷ்ணாபுரத்தில் நடந்த நியூரிட்னோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

Update: 2018-05-06 23:30 GMT
உத்தமபாளையம்,

தேவாரம் அருகே உள்ள பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், பொட்டிப்புரம் ஊராட்சி டி.ராமகிருஷ்ணாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கினார். கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன், மருத்துவ அணி மாநில செயலாளர் டாக்டர் கதிர்காமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

சங்க தமிழில் குறிஞ்சி நிலம் என அழைக்கப்பட்ட தமிழகத்தின் இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை உலக பண்பாட்டுக் களங்களுள் ஒன்று என்று ஐ.நா.மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பு அறிவித்து இருக்கிறது. அமெரிக்காவில் பெர்மி நியூட்ரினோ ஆய்வகத்தில் இருந்து செயற்கை நியூட்ரினோ கதிர்களை பெற்று, பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் அம்பரப்பர் மலை உச்சியில் இருந்து சுரங் கங்கள் அமைக்கப்படும். அதன் மையத்தில் உள்ள பாறைகள் வெட்டி எடுக்கப்படும். அப்போது நொடிக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீர் உள்ளே செலுத்தப்படும்.

இதற்காக தினமும் 12 லட்சம் லிட்டருக்கு மேல் தண்ணீர் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து எடுக்கப்படும். லட்சக்கணக்கான ஜெலட்டின் குச்சிகளும், பல நூறு டன் கரிமருந்துகளும், பாறைகளை தகர்க்க பயன்படுத்தும்போது ஏற்படும் அதிர்ச்சியால் பென்னிகுவிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணை, கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணையும் விரிசல் ஏற்பட்டு வலுவிழக்கும் அபாயம் ஏற்படும்.

அத்துடன் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள மேகமலை, மணலாறு, வெண்ணியாறு மற்றும் வைகை அணை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அணைகளும் பாதிக்கப்படும். இந்த திட்டத்தை வரவேற்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார்.

இந்த மாவட்டத்தில் தான் உங்கள் குடும்பம் மற்றும் வம்சாவழிகள் உள்ளது. இதற்கு அனுமதி கொடுத்தால் எல்லாம் அழிந்துபோகும். மத்திய அரசை எதிர்க்க துணிவு இல்லாமல் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் கைகட்டி, வாய்மூடி இருக்கின்றனர்.

இந்த அரசால் மக்களுக்கும், விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் எந்தவித பயனும் இல்லை. நிம்மதியும் இல்லை. நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதியை விவசாயத்துக்கு ஒதுக்கினால் விவசாயம் சிறப்பு அடையும். என்னை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேனி மாவட்டத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

இதன்காரணமாக தேனியை என்தாய் பூமியாக நேசிக்கிறேன். மக்கள் விரும்பாத நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றினால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். நான் பிறந்த தஞ்சையில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்தால் இன்றைக்கு கடுமையாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கடந்த ஆண்டு கூறினார்கள். ஆனால் ரத்து செய்யவில்லை. இதனால் தற்போது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு தேர்வு எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஒரு அரசு செயல்படுகிறதா? என்று மக்கள் கேட்கும் அளவுக்கு உள்ளது.

கேரள மாநிலத்திற்கு தேர்வு எழுத மாணவருடன் சென்ற அவருடைய தந்தை இறந்து விட்டார். மாணவர் தேர்வு எழுதிவிட்டு தந்தையை பார்க்க சென்ற போது இறந்துவிட்டார் என்று செய்திகேட்டு துடித்தார். இந்த சம்பவம் கடும் வேதனையை உண்டாக்கியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார் கட்சியில் தினகரன் கைப்பிள்ளை என்று... அவருக்கு முன்பே ஜெயலலிதாவிடம் அறிமுகம் உள்ளது. என்னை ஜெயலலிதா 1991-ம் ஆண்டு தேனியில் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது தங்கதமிழ்செல்வன் ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்தார்.

அப்போது ஜெயலலிதாவுடன் அறிமுகம் இருந்தது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் நகர செயலாளராக இருந்தார் என்பது இங்குள்ள மக்களுக்கு அனைவருக்கும் தெரியும். யாரால் முதல்-அமைச்சர் பதவிக்கு சென்றார் என்றும் தெரியும். அதை எல்லாம் விட்டுவிட்டு மக்களை ஏமாற்றும் விதமாக பேசி வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அவைத்தலைவர் அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஸ்டார் ரபீக், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாமணி, அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் உத்தமபாளையம் அப்துல்காதர்ஜெய்லானி, கம்பம் மலைச்சாமி, போடி முருகவேல், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் தீபாவளிராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் துப்பாக்கி ரகுமத்துல்லா, போடி ஞானவேல், பொதுக் குழு உறுப்பினர் சித்ரா மணிகண்டன், மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் எஸ்.கே.எம்.மணி, உத்தமபாளையம் பேரூர் கழக செயலாளர் ஏ.கல்யாணசுந்தர்,

ஆண்டிப்பட்டி ஒன்றியக்கழக செயலாளர் ஆர்.ஜெயக்குமார், கோவில்பட்டி ஊராட்சி கழக செயலாளர் தவச்செல்வம், அ.ம.மு.க. பிரமுகர் பாலூத்து முருகன், கண்டமனூர் ஊராட்சி கழக செயலாளர் சுப்புலட்சுமி கர்ணன், மாவட்ட பிரதிநிதி கணேசபுரம் ஒச்சு, கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் வி.எஸ்.தர்மராஜ், சிறுபான்மையின பிரிவு ஒன்றிய செயலாளர் சிக்கந்தர், மாவட்ட பொருளாளர் பரமேசுவரன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் வனராஜ், மற்றொரு வனராஜ், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி, முன்னாள் நகர் மன்ற தலைவர் ராஜாமணி, சின்னமனூர் நகர செயலாளர் சுரேஷ், கழக பிரமுகர் லோகநாதன், கம்பம் கழக பிரமுகர் அசோக்குமார், கிளை கழக செயலாளர் நீதி, போடி கழக பிரமுகர் அரிமா குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் தொடங்கும் முன்பு இருந்தே மழை பெய்தவாறு இருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு இருந்தனர்.

முன்னதாக ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளரும், மாவட்ட கழக செயலாளருமான தங்கதமிழ்செல்வன் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும், செண்டை மேளம் முழங்க டி.டி.வி. தினகரனுக்கு பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. திறந்தவெளி வேனில் வந்த டி.டி.வி.தினகரன் பூரண கும்ப மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மேலும் செய்திகள்